Home ஆன்மீகம் நினைத்தாலே இனிக்கும் அந்த கால பொங்கல்…

நினைத்தாலே இனிக்கும் அந்த கால பொங்கல்…

132
0

நினைத்தாலே இனிக்கும் அந்த கால பொங்கல்…

தமிழர் திருநாளான பொங்கல் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும். அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் பொங்கல்விழா களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை மர உரலில் வைத்து, இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு மாறி மாறி உலக்கையால் இடித்து, முறத்தால் புடைத்து, பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள்.

பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஜே ஜே என்று குதிபோட ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். நேரடியாகச் சென்று காளவாய்களில் வாங்கி வந்திருந்த சுண்ணாம்புக் கற்களை பெரியபானைகளில் வைத்து, அதில் நீரூற்றிக் கலந்து சுவர்களுக்கு வெள்ளையடிப்பார்கள் ஆண்கள். வெளித்திண்ணைகளில் காவி நிறத்துப் பட்டைகளை அழகாகத்தீட்டுவார்கள்.

அன்றைய பொங்கல் விழாவில் வாழ்த்து அட்டை அனுப்புவது பிரதானமாக இடம் பெற்றிருந்தது. இளைஞர்கள் தனக்குப் பிடித்த நடிகர், நடிகையரின் படம் அச்சடித்த அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பத் திட்டமிடுவார்கள். காதலர்களோ, இதயத்தில் அம்புபாயும் படம் வாங்கலாமா அல்லது பூக்களில் வண்ணத்துப் பூச்சிகள் தேன்பருகும் காட்சி பொருத்தமாயிருக்குமா என்று சிந்தித்துச் சிந்தித்து அட்டைகள் வாங்க கடைக்குச் செல்வதே ஒரு தித்திக்கும் அனுபவம். அதை, யாருக்கும் தெரியாமல், எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு காதலியின் கைகளில் சேர்க்கும் அந்த நேரம் வரை திக்திக் நிமிடங்கள்.

பெரியவர்கள் சாமி படங்கள் உள்ள அட்டைகள் வாங்கி, அதில் தங்கள் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டி, சொந்தங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்கள். வாழ்த்தை வாசிக்கும் உறவுகளும், அடுத்த பொங்கல்வரை, அதை பொக்கிஷமாகக் கருதி, பீரோக்களில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இந்த நவீனயுகத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எல்லோர் கைகளிலும் ஒரு செல். அதில் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாகவோ அல்லது மெசேஜ் வாயிலாகவோ, உணர்ச்சியே இல்லாத மரத்துப்போன ‘ஹேப்பி பொங்கல்’ என்ற ஒற்றைச்சொல்.

கிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். கணவன் வீட்டின் முற்றத்தில் சிறிய மணல் மேடை அமைத்து, அதன் மேலே பாறாங்கல்லையோ, செங்கல் கற்களையோ அடுக்கி அடுப்புப் போன்ற அமைப்பை உண்டாக்கியிருப்பார். பாறாங்கல் அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மனைவி வாரச்சந்தையில் வாங்கிவந்திருந்த மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி, அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு, பானையின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பாள். எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் குழந்தைகள் போட்டிபோட்டுக் கொண்டு தூக்கிவருவார்கள். மனைவி பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் ஊற்றுவாள்.

அடுப்பில் நெருப்பு எரிய எரிய அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கும். பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு. அந்தக் குதூகல நிமிடமும் வரும். பால் பொங்கும். மனைவி குலவைச்சத்தமிட்டு பின் வலம்புரிச் சங்கெடுத்து ஊதுவாள். கணவன் வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை முழக்குவான். குழந்தைகள் “பொங்கலோ பொங்கல்” என்று கூறுவர்.

மனைவி பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலிட்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்குவாள். பொங்கலை குலசாமிக்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் உண்ணத் தொடங்குவார்கள். குழந்தைகள் வழியாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து அனுப்புவார்கள். நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தாத்தாவுக்கு, பேரன் ஊட்டி விடுவான்.

‘இது ஒண்ணு போதுமுடா பேராண்டி, நேரே சொர்க்கந்தாண்டா’ என்று பேரனை மெச்சுவார் தாத்தா. தாத்தா பக்கத்தில், கால்நீட்டி வெற்றிலை பாக்கு இடித்துக்கொண்டிருக்கும் பாட்டிக்கு பேத்தி ஓடிப்போய் பொக்கைவாயில் பொங்கலைத் திணிப்பாள். ‘அடி என்னப் பெத்தாரு, நீ தீர்க்காயுசா வாழணுமுடி ஏஞ்செல்லம்’ என்று பேத்தியை பாட்டி உச்சி முகர்ந்து சொடக்குப் போடுவாள். இதெல்லாம் நடந்தது அந்தக்காலம். இப்போது அது மலையேறி விட்டது. கணவன் கடைகளில் வாங்கிவரும் ஆலைப் பச்சரிசியை, வெண்கலப் பானையில் இட்டு, கடனுக்கு கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து இறக்குகிறாள் மனைவி.

நல்ல நேரம்பார்ப்பது என்கிற சடங்கு போய், கூட்டாக அமர்ந்து பொங்கல் உண்ணும் முறையும் ஒழிந்து, ஆளாளுக்கு எப்போதைக்கு வசதிப்படுகிறதோ அப்போது எழுந்து, அதுவும் டி.வி.யில் மூழ்கியபடியே பொங்கலை உண்டு பொழுதைக் கழிக்கும் வெற்று நாளாக உருமாறிவிட்டது இன்றைய பொங்கல். அதிலும் முதியவர்கள் பாடுதான் பெரும் கொடுமை. விழிப் பானையில் கண்ணீர்ப் பொங்கல் பொங்க அவர்கள் அனாதை விடுதிகளில்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here