Home ஆன்மீகம் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்

தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்

155
0

தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்

கட்டாயக் கடமைகளை விட்டுவிட்டு உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான்.

மாட்டையோ, கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப்போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு ‘தும்பு’ என்பார்கள்.

மாட்டைக் கட்டிப்போட வேண்டுமென்றால் தும்பைத்தான் பலமாகப் பிடிக்க வேண்டுமே தவிர, அதன் வாலை அல்ல. வாலைப் பிடித்தால் என்னவாகும்? மாடு மிரண்டு ஓடிவிடும், காரியம் கெட்டுவிடும்.

இன்று மார்க்கத்தைப் பின்பற்றும் அனேகமானவர்கள், தும்பை விட்டுவிட்டு வாலைத்தான் பிடிக்கின்றார்கள். மார்க்கம் தன் மீது விதித்திருக்கும் கட்டாயக் கடமைகளைக் குறித்து அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் உபரி வணக்கங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவார்கள்.

‘கட்டாயக் கடமைகள் நிறைவேற்றப்படாத வரை உபரி வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்பது இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படை விதிகளில் ஒன்று. இதனைப் புரியாமல் அனேகமானவர்கள் தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்றனர்.

அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை”. (புகாரி)

‘கட்டாயக் கடமைகளை நிறைவேற்றாத வரை இறை நெருக்கம் கிடைக்காது’ என்பது இறை வாக்கு. அவ்வாறு இருக்க, ‘பர்ளை விட்டுவிட்டு சுன்னத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, சுன்னத்தை விட்டுவிட்டு உபரியானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ கூடாது’. ஏனெனில் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் ஒவ்வொன்றும் கட்டளைகளின் அடிப்படையில் மாறுபட்டவை.

ஆகவேதான், கட்டாயக் கடமை (பர்ள்), நபிகளாரின் வழிமுறை (சுன்னா), உபரி வணக்கங்கள் (நபில்) என்று தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவை ஒவ்வொன்றுக்குமான தனித்தனி முக்கியத்துவத்தைக் கொடுத்தே தீர வேண்டும். ‘எல்லாம் சமம்தான், எதை வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம்’ என்று அனைத்தையும் ஒரே மாதிரியாகக் கருதி செயல்படக்கூடாது.

ரமலான் மாதம் வந்துவிட்டால் தூங்காமல் கண் விழித்து இரவு வணக்கத்தில் அதிகம் ஈடுபட்டு காலையில் வேலைக்குச் செல்லும்போது தாமதமாகச் செல்வதையும் இதற்கான உதாரணமாகக் கூறலாம். தூக்கக் கலக்கத்தில் செய்யவேண்டிய வேலையை சரிவரச் செய்யாமல் இருப்பார்கள். இரவு வணக்கம் என்பது உபரி. ஆனால் வாங்கும் சம்பளத்திற்காக ஒழுங்காகவும் நேர்மையாக உழைப்பது கட்டாயக்கடமை அல்லவா.

‘ஹஜ்’ எனும் கட்டாயக் கடமையையும் அவ்வாறே. ஹஜ், வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே கடமை. மீண்டும் மீண்டும் நிறைவேற்றுவது கடமையல்ல. ஆயினும் ஹஜ்ஜையும் உம்ராவையும் மீண்டும் மீண்டும் நிறைவேற்றுவதிலேயே ஒருசிலர் குறியாய் இருக்கின்றார்கள்.

சொந்த ஊரில் பசியாலும் பட்டினியாலும் ஏழைகள் வாடுவார்கள். அதைக் குறித்து அவர்களுக்குக் கவலை கிடையாது. பள்ளிக்கூடம் இன்றியும், படிப்பறிவு இல்லாமலும் ஊர் மக்கள் தவிப்பார்கள். அது அவர்களுக்கு எவ்வித வேதனையையும் ஏற்படுத்தாது. வசிக்கும் ஊரில் போதிய மருத்துவ வசதிகள் இருக்காது. அது குறித்து யோசிப்பதே இல்லை. இவர்களின் கவலை எல்லாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்குச் செல்லவேண்டும். மீண்டும் மீண்டும் உம்ராவுக்குச் செல்ல வேண்டும், பாவக்கறைகளை அங்கு சென்று கழுவ வேண்டும் என்பது மட்டுமே.

எழுபது விழுக்காட்டினர் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுச் செய்வதாக சவூதி அரசுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. விளைவு..? மக்காவில் இட நெருக்கடி ஒருபக்கம். முதல் முறையாக ஹஜ்ஜு செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கோ சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை. மறுபக்கமோ ஊரில் பசி, பட்டினி, வறுமை போன்றவை தலைவிரித்தாடும்.

மீண்டும் மீண்டும் ஹஜ், உம்ரா செய்வதற்காக செலவிடும் பணத்தை ஏழையின் கண்ணீர் துடைக்க செலவிட்டால், உபரியான ஹஜ், உம்ரா செய்யும்போது கிடைக்கும் நற் கூலியைவிட அதிகக் கூலியை அல்லாஹ் கொடுப்பான் என்பது ஏனோ இவர்களுக்குத் தெரிவதில்லை. ஏழைகளுக்கு உதவுவது வசதி படைத்தவர்கள் மீதான கடமையல்லவா?

ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஈராக் பகுதியைச் சார்ந்த ஒருவர் வந்து, “கொசுவைக் கொல்லும்போது இஹ்ராம் ஆடையில் (ஹஜ், உம்ரா வழிபாட்டின்போது அணியும் ஆடைக்கு இஹ்ராம் என்பர்) கொசு ரத்தம் பட்டுவிட்டால் என்ன செய்வது? அது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

அந்த நபரிடம் இப்னு உமர் (ரலி) கேட்டார்கள்: “நீ ஈராக் பகுதியைச் சார்ந்தவனா?”. அவர், “ஆம்” என்று கூறவும், அவருடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறாமல் அருகில் இருந்தவர்களிடம் இப்னு உமர் (ரலி) கூறினார்:

“ஈராக்வாசிகளைப் பாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்களைக் கொலை செய்திருக்கின்றார்கள். அன்னாரது ரத்தத்தை ஓட்டியிருக்கின்றார்கள். ஆனால், அது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆடையில் படும் கொசுவின் ரத்தம் அவர்களுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது”.

இப்படித்தான் அனேகமானவர்களின் இன்றைய நிலையும். தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்றார்கள். முக்கியமானவற்றை விட்டுவிடுவார்கள். உபரியானவற்றைச் செய்வார்கள். கட்டாயக் கடமையான தொழுகையை விட்டுவிடுவார்கள். அரிதிலும் அரிதான உபரித் தொழுகையை நிறைவேற்ற முயல்வார்கள்.

ஏன் என்று கேட்டால்.. ‘இந்தத் தொழுகையைத் தொழுதால் ஒருவருடம் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுமாமே’ என்று பதில் கூறுவார்கள்.

தொழுகைக்கு பள்ளிவாசல் பக்கமே ஒதுங்காதவர் திடீரென ஒருநாள், ‘கிப்லா (தொழுகையில் முன்னோக்கும் திசை) எந்தப் பக்கம் இருக்கு?’ என்று கேட்டார். நமக்கு பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். ‘தொழப் போறீங்களா..?’ ரொம்ப சந்தோஷம் என்று கூறி நாம் வாய் மூடவில்லை, அதற்குள் அவர், ‘இல்ல.. இல்ல.. தூங்கும்போது கிப்லா பக்கம் கால் நீட்டக்கூடாது என்பது எனக்கு இன்றுதான் தெரியும். அதனால்தான் உங்ககிட்ட கேட்கிறேன்’ என்று கூறி நம்மை வாய்பிளக்க வைத்தார்.

லாபகரமாக வியாபாரம் செய்யும் அனேக வியாபாரிகள் வட்டி குறித்து கவலைப்படுவதும் கிடையாது. ஜகாத் கொடுப்பது குறித்து யோசிப்பதும் இல்லை. ஆனால் உபரி நோன்பு வைப்பது குறித்தும் குர்ஆன் ஓதும்போது ‘உளு’ (அங்க சுத்தி) கண்டிப்பாகச் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் விளக்கம் கேட்பார்கள்.

கட்டாயக் கடமைகளை விட்டுவிட்டு உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான். அப்படிப் பிடித்தால் மாடு மிரண்டு ஓடுவதைப் போன்று மார்க்கமும் ஓடிவிடும், எச்சரிக்கை.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here