Home ஆன்மீகம் தீபாவளியின் சிறப்பு

தீபாவளியின் சிறப்பு

153
0

தீபாவளியின் சிறப்பு

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு. ஒருவனுடைய பிறந்த நாளை நினைவு நாளாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். அந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு இறந்த நாளை பண்டிகையாகக் கொண்டாடுகிறோமென்றால் அது தீபாவளி மட்டமே.

மகாவிஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன். பூமாதேவி அவனைச் சிறந்த முறையில் வளர்த்து வந்தாள். தீயவர்களோடு பழகாமல் இருக்கும் பொருட்டு, வீட்டிலேயே வைத்து பாதுகாத்தாள். நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொடுத்து, அதை தினமும் ஜபம் செய்யவும் பயிற்சி அளித்தாள். ஆனால் அவளின் எண்ணம் ஈடேறவில்லை. இறைவனுக்கு மகனாகப் பிறந்திருந்த போதும், நரகாசுரனிடம் அசுர குணம் தலைதூக்கியது. தாயின் கட்டுப்பாட்டில் இருந்து வெளி உலகிற்கு வந்து அசுரர்களுடன் சேர்ந்து பலவித போர் பயிற்சிகளையும் பெற்றான். நாளடைவில் அசுரர்களுக்கு தலைவனானதோடு, தவங்கள் பல செய்து அளவில்லா வரங்களை பெற்றான்.

தன் தாயைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரத்தைப் பிரம்மாவிடம் இருந்து பெற்ற நரகாசுரன், ஆணவச் செருக்கினால் மக்களைப் பலவாறு துன்புறுத்தினான். தவம் செய்யும் முனிவர்கள், தவச்சீலர்கள், தேவர்கள் என எவருமே அவனுடைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை. அவனுடைய கொடுமைகள் அதிகமானதால் அதற்கும், அவனுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய நேரம் நெருங்கியது.

தேவர்களின் தலைவன் இந்திரன், கிருஷ்ணரிடம் சென்று நரகாசூரனின் கொடுமைகளைக் கூறி முறையிட்டார். ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனுடன் போர் புரியச் சென்றார். அவரது தேருக்குச் சாரதியாக பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா இருந்தாள். போர் கடுமையாக நடந்தது. இருவரும் பலவித அஸ்திரங்களை ஏவுவதும், தடுத்து நிறுத்துவதுமாக இருந்தனர். அந்த சமயத்தில், நரகாசுரன் எய்த அம்பு பட்டு, மயக்கம் அடைந்த கிருஷ்ணர் தேரிலேயே சரிந்தார்.

இதைக் கண்டு சாரதியாகச் சென்ற சத்தியபாமா, தானே வில்லை ஏந்தினாள். தன் தாயின் அன்புக்கு அடிபணியாது அசுரனான நரகாசுரன் அவளின் அம்புக்கு இரையானான். பிரம்மாவிடம் தான் பெற்ற வரப்படி தன் தாயாலேயே மரணமடைந்தான். தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளி பண்டிகையின் விசேஷம். அறம் தவறாது இருப்பது மனித குணம். அதைத் தவறி நடப்பவன் மகனேயானாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதால் பெற்ற தாயே போரிட்டுக்கொன்றாள்.

தன் தாயின் அம்புக்கு அடிப்பட்டு வீழ்ந்த நரகாசுரன் தவறுக்கு வருந்தியதோடு, தன்னுடைய இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என வேண்டிக் கேட்டான். அவனுடைய பெற்றோர்களும் அதை அங்கீகரித்தனர். மக்களும், மற்றோரும் அசுரனின் துன்பங்களிலிருந்து விடுபட்ட நாளை, அவன் விருப்பப்படியே “தீபாவளி” பண்டிகையாக நாம் கொண்டாடுகின்றோம்.இது தென்மாநில மக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம்.

இதே தீபாவளிப் பணிடிகையை, வடமாநில மக்கள் வீடு முழுவதும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, தீபத் திருநாளாக கொண்டாடுகின்றனர். தன் தந்தை கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதற்காக வனவாசம் செய்ய ஸ்ரீராமர் காட்டிற்குச் சென்று விடுகிறார். அதன் பின்னர் ராவணனைக் கொன்று வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் வனவாசத்தையும் முடித்துக் கொண்டு காட்டை விட்டு அயோத்தி நகருக்கு வருகிறார்.

ஆண்டுகள் பல பார்க்காமலிருந்த ஸ்ரீராமபிரானைக் காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ராமர் காட்டில் இருந்து நாட்டிற்கு வரும் நாளை வீடுகள் தோறும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுகின்றனர். அந்த நாளையே “தீபாவளி” என்று வடமாநில மக்கள் அழைக்கின்றனர். தென்னகத்தில் நரகாசுரன் என்ற அசுரனின் அழிவும், வடமாநிலத்தில் ஸ்ரீராமபிரான் என்ற அவதாரப் புருஷனின் வருகையும் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளியன்று, அதிகாலையில் எழுந்து மூலிகை போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை தலையில் வைத்து, கதகதப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீரானாலும், கிணற்று நீரானாலும், அதில் தீபாவளியன்று கங்கை பிரசன்னமாவதாக ஐதீகம். பின்னர், வீட்டிலுள்ள பூஜை அறையில் திருமால், மகாலட்சுமி ஆகிய படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நைவேத்தியமாக படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலட்சுமியையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று புத்தாடைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து மகிழ, பெரியவர்களோ, சுற்றத்தார்களையும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து வருதல், தன்னிடம் வேலை செய்யும் வேலையாட்களுக்குப் புத்தாடைகள், பட்டாசுகள், பரிசுகள் தருதல் என மற்றவர்களை மகிழ்வித்து கொண்டிருப்பார்கள். அன்று மாலை குடும்பத்தினரோடு ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here