Home ஆன்மீகம் ஐப்பசி பௌர்ணமியில் சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேக வைபவம்

ஐப்பசி பௌர்ணமியில் சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேக வைபவம்

244
0

ஐப்பசி பௌர்ணமியில் சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேக வைபவம்

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது.

லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. தஞ்சை பெரிய கோவிலை முதலாம் ராஜராஜன் மிக பிரம்மாண்டமாக கட்டினான். இந்த ஆலய சிவபெருமானுக்கு உயிர்களுக்கெல்லாம் ஈசன், மிகவும் பெரிய லிங்க வடிவுள்ள பெருமான் என்றெல்லாம் பொருள்படும் பிரகதீஸ்வரர் என்ற பெயரிட்டு மகிழ்ந்தான். அவன் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை எழுப்பினான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற திருநாமத்தையே சூட்டினான். இந்த கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர். இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும் பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here