Home ஆன்மீகம் உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன்

141
0

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன்

கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர். தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும், அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார். அதைப்போல் கர்த்தர் நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்கிறவராய் இருக்கிறார்.

இந்நாளில் எல்லா தேசங்களிலும் பொருளாதாரத்தில் நெருக்கடிகள், பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியால் பெரிய பணக்காரர்கள் முதல், வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் ஏழை எளிய ஜனங்கள் வரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் நிமித்தம் பாவம் பெருகுகிறது. சமாதானம் குறைகிறது. தற்கொலை, மரணம் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றது.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதும் போது ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலிப்.4:19) என்று எழுதியிருக்கிறார்.

ஆகவே குறைவை நிறைவாக்கும் நம் தேவன் உங்கள் சகல குறைவுகளையும் நிறைவாக்க வல்லவராய் இருக்கிறார். நிச்சயம் கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்வில் வெளிப்பட்டு உங்களின் சகல குறைவுகளும் நிறைவாக்கப்படும்.

குறைவு எப்போது ஏற்படுகிறது?

‘எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி…’ (லூக்.15:14)

நம்முடைய வாழ்வில் குறைவு அல்லது நெருக்கடி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான ஒரு காரணம் தேவனாகிய கர்த்தர் விரும்பாததை நாம் செய்யும் போது நம் வாழ்வில் குறைவு ஏற்படுகிறது.

மேற்கண்ட வசனத்தை கவனமாய் வாசித்துப் பாருங்கள். தகப்பன் வீட்டில் இளைய குமாரன் இருந்த காலமெல்லாம் அவனுக்குள்ளே எந்த குறைவும் ஏற்படவில்லை. நிறைவான பொருளாதாரம், நிறைவான சந்தோஷம், அவனில் காணப்பட்டது.

அவன் தகப்பன் வீட்டைவிட்டு தன் சொத்தை எல்லாம் பிரித்துக் கொண்டு பாவிகளும், கெட்ட நண்பர்களும், விபசாரிகளும் நிறைந்த இடத்திற்கு (தூர தேசம்) சென்ற போது தான் எல்லாவற்றையும் அவன் இழந்தவனாய் குறைவுபடத் தொடங்கினான்.

ஆண்டவர் விரும்பாத காரியங்களில் ஈடுபடும் போது நாமாகவே குறைவுகளில் சிக்கிக் கொள்கிறோம். குறைவு என்ற பிரச்சினைக்கு மூலகாரணமாய் இருப்பவன் பிசாசு. ஆகவே குறைவை உண்டாக்குகிற அவனை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நிற்கும் போது குறைவு என்ற ஆவி நம்மை விட்டு ஓடிப்போகும்.

மேலும், குறைவு வருவதற்கு மற்றொரு காரணம், நமக்கு உண்டான வருமானத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்கிற ஞானம் இல்லாமையே. அநேக குடும்பங்களில் ஞானமில்லாமல், பொறுப்பில்லாமல் வருவாய்க்கு அதிகமாய் செலவு செய்து, கடன்பட்டு, கடைசியில் குறைவுள்ளவர்களாய் மாறுகிறார்கள். இப்படிக் குறைவான வாழ்வு ஒவ்வொரு ஆத்மாவையும் மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற இந்நாட்களில் அருமை ஆண்டவரிடத்தில் விசுவாசத்தோடு வருவீர்களேயானால் உங்கள் குறைவை நிறைவாக்கி, சகல தேவைகளையும் சந்திக்க அவர் வல்லவராய் இருக்கிறார்.

நம் தேவைகளை கர்த்தர் எப்படி சந்திப்பார்?

‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்’ (யோவான் 14:14).

நம்முடைய தேவை சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் எல்லாமே லேசான காரியம். ஏனென்றால் பூமியும் அதின் நிறைவும் ஆண்டவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கிறதல்லவா.

ஆகவே, ஆண்டவருக்கு நம் தேவைகளை சந்திக்க முடியும். விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் நூறு வயதான ஆபிரகாமிற்கு மகனாக ஈசாக்கைக் கொடுத்தவர் அல்லவா நம் ஆண்டவர்.

தேவனுடைய வார்த்தையின்படி, கேரீத் என்ற ஆற்றின் அருகே மறைந்து வாழ்ந்த எலியாவிற்கு காகத்தின் மூலம் ஆகாரம் கொடுத்து அவரது தேவைகளை பூர்த்தி செய்தவர் அல்லவா நம் ஆண்டவர்.

நம் அருமை ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தம் என்னவெனில், ‘என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் நான் தருவேன்’.

உங்கள் கண்களுக்கு முன்பாய் தோன்றுகிற சகல பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கண்டு மலைத்துப் போகாமல் உங்கள் நாவில் இயேசுவின் நாமத்தில் பிரார்த்தனை செய்து அற்புதங்களை எதிர்பாருங்கள். அவரது நாமத்தை உங்கள் நாவில் உச்சரிக்கும்போதே உங்கள் தேவைகளை சந்திக்க அவர் ஆவலோடு வருவார்.

நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார். உங்களைச் சுற்றியிருக்கிற தரித்திரத்தின் ஆவியை விரட்டி அடிக்க அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here