Home ஆன்மீகம் இறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை

இறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை

148
0

இறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை

நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.

ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அதன்மூலம் உலகில் மனித இனத்தைப் பல்கி பெருகச் செய்தான், அல்லாஹ். ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் பற்றிய அறிவை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவ்வப்போது அவனுடைய அதிகாரம் பெற்ற தூதுவர்களை அனுப்பி வைத்தான். கிட்டதட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் தூதுவர்களை இறைவன் அனுப்பி வைத்துள்ளான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு கூட்டத்தாருக்குமாக ஒரு தூதரை இறைவன் அனுப்பி வைத்தான். ஒவ்வொரு தூதரை அனுப்பும் போதும், அம்மக்களுக்கு அக்கால கட்டத்தில் பொருந்தக்கூடிய நல்வாழ்வியல் தத்துவத்தைப் போதித்து வந்தான். எந்த கட்டளையை எடுத்து செயல்படுத்த வேண்டும், எதனை தடுத்து, விடுத்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. அத்தனை நபிமார்களும் ஏதோ ஒரு கூட்டத்திற்காகவோ, ஏதோ ஒரு ஊருக்காகவோ அனுப்பப்பட்டவர்கள்.

ஆது, சமூது, மத்யன் வாசிகள், எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் என்று பல கூட்டத்திற்கான நபிமார்கள் வந்தனர். ஆனால் இறுதி நபி முகம்மது (ஸல்) அவர்களை, உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நல்வழியை எடுத்துச் சொல்லும் நபியாக இறைவன் அனுப்பி வைத்தான். ‘முகம்மது நபியை படைக்கவில்லை என்றால், இந்த உலகத்தையே படைத்திருக்க மாட்டேன்’ என்று திருக்குர்ஆனில் ஓர் இடத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

அப்படிப்பட்ட பூரணத்துவம் வாய்ந்த நபிகள் நாயகத்திற்கு திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அருளினான். அதில் சொல்லப்பட்ட அத்தனை கட்டளைகளும் மறுமைநாள் ஏற்படும் வரை எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.

அதே சமயம் நபி பெருமானார் (ஸல்) அவர்கள், தன் சுய விருப்பத்தின் பேரில் சிலவற்றை வேண்டுமென்றோ, சிலவற்றை வேண்டாம் என்றோ ஒதுக்குவதற்கு கூட அவர்களுக்கு உரிமைத் தரப்படவில்லை. அது போன்ற சம்பவம் ஒன்று அண்ணலாரின் வாழ்வில் நடந்தது. அதுபற்றி காண்போம்…

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல திருமணங்களை முடித்தார்கள். அதற்கு காரணம் விவாகத்தின் மீதுள்ள விருப்பம் அல்ல. மாறாக, திருமணம் குறித்த சில சட்டதிட்டங்களை வழிமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர நபிகளாரின் அத்தனை மனைவிகளும் விதவைகள். சிலர் நபிகள் நாதரை விட அதிக வயதுடையவர்கள்.

போர் காலங்களில் ஏற்படும் இழப்புகள், மற்றும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் பிரச்சினைகளால் தனித்து தவித்துக் கொண்டிருக்கும் பெண்களை ஆதரிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தில் தான் அத்தனை திருமணங்களை தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டார்கள். சட்டங்களைச் சொல்வது மட்டுமல்ல, சட்டங்களை வாழ்வில் ஏற்று வாழ்ந்து காட்டிய ஒரே மார்க்கப் போதகர் நபிகள் நாயகம் மட்டும் தான்.

தன் வாழ்நாள் முழுவதும் அத்தனை மனைவிகளிடமும் ஒரே மாதிரியாய் அன்பும் பாசமும் கொண்டு அவர்களிடையே நீதி செலுத்தி வாழ்ந்தார்கள். மனைவியர், தனித்தனி வீடுகளில் இருந்தாலும் ஒவ்வொரு நாளை ஒருவருக்காக ஒதுக்கி அவர்களோடு தங்கி அவர்கள் சுக துக்கங்களில் பங்கேற்று வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அஸர் தொழுகைக்குப் பின் ஒவ்வொரு மனைவியரையும் சந்தித்து அவர்களோடு அளாவளாவி அன்றைய தினம் ஏதாவது முக்கிய பிரச்சினை இருந்தால் அதைத்தீர்த்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்கள்.

அதுபோன்று ஒவ்வொரு நாளும் நபிகளார் அன்னை ஜைனப் பின் ஜஹல் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லும் போது அவர்களின் உபசரிப்பில் மகிழ்ந்தவர்களாக கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் பரிமாறப்படும் தேனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இது அன்றாட நிகழ்வாய் நடந்தேறி வந்தது.

ஆனால் இது நபிகளாரின் மற்ற மனைவியரான, ஆயிஷா (ரலி), ஹப்ஸா (ரலி) ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. எனவே இருவரும் அதை எப்படியாவது தடை செய்து விட வேண்டும் என்ற கருத்தில் ஆலோசனை செய்தனர்.

“நாயகம் உங்கள் வீட்டிற்கு வரும் போது நீங்கள் நபிகளிடம் ‘உங்கள் வாயிலிருந்து விரும்பத் தகாத மணம் ஒன்று வீசுகிறதே, என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று கேளுங்கள், என் வீட்டிற்கு வரும் போதும் அதே கேள்வியை நான் கேட்கிறேன். அதனால் அருமை கணவர் நம்மை திருப்திப்படுத்தும் நோக்கில், ஜைனப் (ரலி) வீட்டில் தேன் அருந்துவதை நிறுத்தி விடுவார்கள்” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அதன்படியே நபிகளாரிடம் கேட்கவும் செய்தார்கள். இதையடுத்து நபிகளார் இவ்வாறு கூறினார்கள்: ‘ஹப்ஸாவும் இதையே சொன்னார், ஆயிஷாவே நீங்களும் இதையே சொல்கிறீர்கள். நான் தேனருந்துவதால் உங்களுக்கு இப்படி ஒரு சங்கடம் விளைகிறது என்றால் நான் இனிமேல் தேன் அருந்த மாட்டேன்’ என்று சத்தியம் செய்து விட்டார்கள்.

நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டால் அனைவரும் அதனையே பின்பற்றுவர். தேனின் அற்புத குணத்தைப் பற்றி அல்லாஹ் சொன்னது அத்தனையும் வீணாகிடுமே. இந்த நிலையில் அதனை மறுத்து அல்லாஹ் உடனே இந்த இறைச்செய்தியை இறக்கினான்.

“நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்ததை எடுத்துக் கொள்வது இல்லை என்று நீர் ஏன் சத்தியம் செய்து அதை ஹராம் என்று விலக்கி கொண்டீர். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகாகிருபையுடையவனும் ஆவான்” (திருக்குர்ஆன் 66:1)

அதாவது, ‘நான் ஹலாலாக்கிய தேனை நபிகளார் எப்படி ஹராமாக்கி கொண்டு சத்தியம் செய்ய முடியும். உடனே அந்த சத்தியத்திற்கான பரிகாரம் செய்து சத்தியத்திலிருந்து மீண்டு விடுங்கள்’ என்று இதன் மூலம் நபிகளுக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“ஆகவே உங்கள் அந்த சத்தியத்திற்கு நீங்கள் பரிகாரம் கொடுத்து அதை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். அல்லாஹ் தான் உங்கள் எஜமானன் அவன் அனைவரையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.” (திருக்குர்ஆன் 66:2)

கண்மணி நாயகம் சத்தியத்திலிருந்து மீண்டதும். தன் மனைவிமார்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட ரகசியத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டினான்.

இதன் மூலம் நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.

ஷரிஅத் சட்டதிட்டங்கள் மிக நுட்பமாக அல்லாஹ்வால் அருள்மறையில் அருளப்பட்டது. அதன் நுணுக்கங்களை ஆழமாக அறிந்து அதன்படி செயலாற்றும் போது வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டு. மாறு செய்யும் போது மறுமையில் நிச்சயம் தண்டனையுண்டு. இதனை முழுமையாய் உணர்ந்து வாழும் போது தான் ஒருவன் உண்மை முஸ்லிமாக முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருளி கிருபை செய்வானாக, ஆமின்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here