Home ஆன்மீகம் இயேசு சொன்ன உவமைகள் : சீடர் யார்

இயேசு சொன்ன உவமைகள் : சீடர் யார்

609
0

இயேசு சொன்ன உவமைகள் : சீடர் யார்

இயேசுவின் பின்னால் திரளான மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். இயேசுவின் பின்னால் சென்ற மக்கள் அவருடைய புதுமைகளினாலோ, போதனைகளினாலோ, அப்பங்களினாலோ ஈர்க்கப்பட்டவர்கள்.

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:

என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.

“உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!

“வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

இயேசு தனக்கு சீடராய் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களைப் பற்றி இங்கே பேசுகிறார்.

இயேசுவின் பின்னால் திரளான மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். இயேசுவின் பின்னால் சென்ற மக்கள் அவருடைய புதுமைகளினாலோ, போதனைகளினாலோ, அப்பங்களினாலோ ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால் உண்மையாய் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவர்களில் வெகு சிலரே.

இயேசு அதை நன்கு அறிந்திருந்தார். அவர் எண்ணிக்கையில் விருப்பம் கொள்பவரல்ல. தரமான சீடர்கள் வேண்டும் என்பதே அவரது விருப்பம். எனவே இயேசு திரும்பிப் பார்த்து ஒரு செய்தியையும், அதைச் சார்ந்த இரண்டு உவமைகளையும் சொல்கிறார். இந்த விவிலியப் பகுதி சொல்லும் விஷயங்களில் முக்கியமானவை இவை எனக் கொள்ளலாம்.

  1. இயேசுவைப் பின்பற்ற வேண்டுமெனில் உறவுகளையும், உலகையும் வெறுக்க வேண்டும். அதாவது, அவை எல்லாவற்றையும் விட அதிகமாய் இயேசுவை நேசிக்க வேண்டும். உலகின் வசீகரங்கள் அனைத்தையும் விட்டு விட்டு இயேசுவை பின்பற்ற தயாராய் இருக்க வேண்டும்.
  2. தன்னையே வெறுக்க தயாராய் இருக்க வேண்டும். தன் உயிரை விட அதிகமாய் இயேசுவை நேசிக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவது என்பது போராட்டமானது. சவாலானது. சொந்த உயிரைக் கூட‌ இழக்க தயாராய் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
  3. இயேசுவைப் பின்பற்ற எல்லோருமே முதலில் ஆர்வமாய் களமிறங்குகின்றனர். ஆனால் கொஞ்ச காலத்திலேயே சோர்வடைந்து விடுகின்றனர். இயேசுவைப் பின்பற்றுவது என்பது சட்டென முடிந்து போகும் விஷயமல்ல. கடைசி வரை நிலைத்திருப்பதே முக்கியம். எனவே களமிறங்கும் முன் நிலைத்திருக்க முடியுமா என சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முன்பெல்லாம் ஒரு குருவிடம் மாணவர்கள் முழுமையாய் சரணடைந்து, அவர்களோடே தங்கி, அவர்களுக்குப் பணிவிடை செய்து கற்கும் குருகுல வழி இருந்தது. இன்று அப்படியில்லை. எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் போன அவசரமாகிவிட்டது. தயாராதல் அவசியம்.
  4. தாய் தந்தையை மதிக்கச் சொன்னவர் இயேசு. அதே இயேசு அவர்களை விட தன்னை அதிகமாய் அன்பு செய்யச் சொல்கிறார். பிள்ளைகள் கர்த்தரால் வரும் வரம் என்ற இறைவன் அவர்களை விட அதிகமாய் தன்னை நேசிக்கச் சொல்கிறார். திருமண பந்தத்தை உருவாக்கிய இறைவன் மனைவியை விட அதிகமாய் தன்னை நேசிக்கச் சொல்கிறார். சுருக்கமாக, தான் படைத்தவற்றை விட, படைத்த தன்னை அதிகமாய் நேசிக்க வேண்டும் என விரும்புகிறார். இறைவனை நேசிக்கும் போது மற்ற உறவுகளை நாம் முன்பை விட அதிகமாய், ஆழமாய் நேசிப்போம் என்பதே உண்மையாகும்.
  5. தன்னைப் பின்பற்ற விரும்புபவர், தான் மிக அதிகமாய் நேசிக்கும் அனைத்தையும் விட்டு விட தயாராய் இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். ஆபிரகாம் தனது ஒரே மகனான ஈசாக்கைப் பலியிட தயாரானார். மோசே தனது செல்வங்கள் அனைத்தையும் விட்டு விட்டு இறைவன் அழைப்பை ஏற்றார். அத்தகைய மனிதர்களே அழைப்புக்கு தகுதியானவர்கள் என்பதை இயேசு சொல்கிறார்.
  6. தனிமனிதனாக ஒரு கட்டிடம் கட்டுவதாய் இருந்தாலும் சரி, ஒரு மிகப்பெரிய படையோடு போரிடுவதாய் இருந்தாலும் சரி. திட்டமிடல் முக்கியம். நாம் இறைவனிடம் தனியாய் வந்தாலும், ஒரு குழுவாய் வந்தாலும் இயேசுவைக் கடைசி வரை பின்பற்றும் உறுதி இருக்க வேண்டும்.
  7. தனது சிலுவையை மனிதன் தானே சுமக்க வேண்டும், அப்போது தான் இயேசுவைப் பின்பற்ற முடியும். இதன் பொருள் என்ன ? இயேசுவைப் பின்பற்றும் போது ஏராளமான எதிர்ப்புகள் வரும். உலகமே நம்மை ஏளனமாய்ப் பார்க்கும். பொழைக்கத் தெரியாதவன் என ஏசும். என்ன நடந்தாலும் அத்தகைய அவமானங்கள் எனும் சிலுவைகளை மகிழ்ச்சியோடு சுமக்கின்ற மனநிலை வேண்டும்.
  8. சிலுவை என்பது தனது விருப்பமும், இறைவிருப்பமும் மோதிக் கொள்ளும் இடம் என்பார் சகோ. சகரியா பூனன். அந்த இடத்தில் இறை விருப்பத்தை தேர்ந்தெடுப்பவர்களே இயேசுவின் சீடர்களாகத் தகுதியுடையவர்கள். மற்றவர்கள் பாதி வழியில் பாதை மாறுபவர்கள்.
  9. முதலில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் இறைவனைப் பின்பற்றும் உறுதி உடையவர்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த உறுதி உண்டு என்பதை உறுதிப்படுத்தினால் தயக்கமின்றி இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அந்த உறுதி இல்லையேல் அந்த உறுதியை முதலில் உருவாக்கிக் கொள்ள இறைவனை நாடவேண்டும்.
  10. எதுவும் இல்லாத நிலையில் இறைவனைப் பின்பற்றுவதிலல்ல பெருமை. எல்லாம் இருக்கும் போது அதையெல்லாம் இழந்து விட்டு இயேசுவைப் பின்பற்றும் மனம் வேண்டும். அதுவே வலிமையானது. உலகம் பல்வேறு வகைகளில் நம்மை பின்னுக்கு இழுக்கும். உறவுகள், செல்வங்கள், புகழ், சாத்தானின் சூழ்ச்சி இப்படி பல்வேறு சோதனைகள் அணிவகுக்கும். இவற்றையெல்லாம் தாண்டி இறைவனைத் தொடரவும், இறுதிவரை தொடரவும் உறுதி வேண்டும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here