Home கல்வி உலகம் நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

194
0

நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

தமிழ் மொழியல் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கவும், புதிய மருத்துவ தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் ஆஜராகி, நீட் தேர்வு முறை போன்ற பொதுவான தேர்வு முறைகளை தமிழகம் 30 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறது. அடுத்த கல்வியாண்டு தொடங்கி நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நேராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மனுதாரர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்ஜிஆர் பிரசாத், நீட் தேர்வு வினாத்தாளில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகளில் சிறிய அளவிலான தவறு நேரவில்லை. ஆங்கிலத்தை பார்த்து தேர்வு எழுத வேண்டும் என்றால் இருமொழிகளில் வினாத்தாளுக்கு அர்த்தம் என்ன? 49 கேள்விகள் தவறாக கேட்கப்படும் போது எப்படி அந்த தேர்வு சமமான தேர்வாக இருக்க முடியும் என்றார். பின்னர், கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

அடுத்த கல்வியாண்டு முதல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி, நீட் தேர்வை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாளில் எவ்விதக் குளறுபடியும் நேராத வகையில், மொழியாக்கம் செய்யப்படும் வினாத்தாள் அந்தந்த மொழி வல்லுநர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படும் வினாத்தாள், மீண்டும் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யயப்பட்டு சரிபார்க்கப்படும். இதுபோன்ற இருவழி மொழியாக்கம் வினாத்தாளில் குறைகளை முற்றிலும் களைய உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட பிறகும், வினாத்தாளில் தெளிவின்மை ஏற்பட்டால், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி ஆங்கில வினாத்தாளே இறுதியாகக் கொள்ள வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. சரியான விடை அளித்தும் தேர்ச்சிப் பெறவில்லை என மாணவர்கள் தெரிவித்தது தொடர்பான வழக்கு அல்ல இது. சரிபார்ப்பு விடைத்தாளிள் (ஆன்ஸ்வர் கீ) தெரிவிக்கப்பட்ட விடைகள் தவறானது என்ற அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதால் மாணவர்கள் விடையளிக்க முடியவில்லை என்பது தொடர்பான வழக்கும் அல்ல. ஆங்கில வினாத்தாள் குறித்து எவ்வித பிரச்னையும் இல்லை.

எனவே, சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) கடந்த ஜூலை 10-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். 2019-20 ஆண்டு முதல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் இளம்நிலை நீட் தேர்வின் வினாத்தாள், இருமொழிகளில் இருக்க வேண்டும்.

இது தொடர்பாக ஏஜென்ஸியின் இயக்குநர் அக்டோபர் 22-ஆம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி வினத்தாள்கள் அமைய வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் தினமணி நிருபரிடம் கூறியது:

உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்துக்குப் பலனளிக்கவில்லை. இதனால், தமிழ் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை அணுகி இனி வரும் காலங்களில் சமச்சீர் கல்வி அடிப்படையில்தான் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் எனச் சட்டத்தை திருத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழக மாணவர்களை தமிழக அரசு கைவிடக்கூடாது. பலமொழிகள் உள்ள நமது நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள 8-ஆவது அட்டவணையில் உள்ள ஒரு மொழியில் தேர்வு எழுதக் கூடாது என்பது துயரம் அளிக்கிறது என்றார் அவர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here