Home நாட்டு நடப்பு விவசாயிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படும் 

விவசாயிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படும் 

114
0

விவசாயிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படும் 

மத்திய அரசு கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 (மாதம் ரூ.500) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவு காணப்படுகிறது.

அதே நேரம் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு வெறும் ரூ.17 மட்டுமே கிடைக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறை கூறியிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நிதி மந்திரி அருண் ஜெட்லி, இந்த திட்டம் தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் துயர் நீக்குவதற்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களான வீடு, மானிய உணவு, இலவச சுகாதார வசதிகள், மின்சாரம், சாலை, கியாஸ் இணைப்புகள் உள்ளிட்டவற்றுடன் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் என்ற வரிசையில் மாதம் 500 ரூபாய் வழங்கப்படும்.

இந்த ‘விவசாயி வருமான ஆதரவு திட்டம்’ இந்த ஆண்டு முதல் தொடங்குகிறது. அரசின் வருவாய் அதிகரித்தால் இந்த தொகை மேலும் அதிகரிக்கப்படும் என உறுதியாக கூறுகிறேன். தற்போது ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடியுடன் இந்த திட்டத்தை தொடங்குகிறோம். இது வருகிற ஆண்டுகளில் அதிகரிக்கப்படும்.

மேலும் இந்தி திட்டத்தை, மாநிலங்கள் தங்கள் வருவாய் ஆதரவு திட்டங்களுடன் சேர்த்து இந்த தொகையை அதிகரிக்க முடியும். சில மாநிலங்கள் இதற்கான பணிகளை தொடங்கி விட்டன. பிற மாநிலங்களும் இதைப்போல மேற்படி தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

நிலமில்லாத சுமார் 15 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள். அவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் ஊரக மக்களுக்கான திட்டங்கள் இருக்கின்றன. தற்போதைய அரசு கிராமப்புறங்களுக்கு பல லட்ச கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

காங்கிரஸ் கட்சி இதுவரை செய்ததாக கூறும் மிகப்பெரிய திட்டம் என்ன? ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிதி மந்திரி ப.சிதம்பரம் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்தார். ஆனால் உண்மையில் வெறும் ரூ.52 ஆயிரம் கோடிதான் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. பெரும் முதலாளிகளுக்குத்தான் அதிக தொகை சென்றிருக்கிறது. அது மோசடியாக மாறி இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூறியுள்ளார்.

பட்ஜெட் பரிந்துரைகள் தொடர்பான ராகுல் காந்தியின் விமர்சனத்தை பார்க்கும் போது, அவர் இன்னும் வளர வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அவர் கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் அல்ல, மாறாக தேசிய தேர்தலிலேயே போட்டியிடுகிறார் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

இதற்கிடையே சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தி வெளியிட்டு இருப்பதற்கும் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அலோக் வர்மாவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, புதிய இயக்குனரை தேர்வு செய்யும் கமிட்டியில் இருந்து தானாகவே விலகியிருக்க வேண்டும் என தனது ‘டுவிட்டர்’ தளத்தில் ஜெட்லி கூறியுள்ளார். ஒருதலைப்பட்சம் மற்றும் மோதல் போக்கு போன்ற பிரச்சினைகளால் கார்கே அவதிப்படுவதாகவும் அவர் கிண்டல் செய்திருந்தார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here