Home நாட்டு நடப்பு கிடுகிடுக்க வைத்த ரபேல் டீல்..  

கிடுகிடுக்க வைத்த ரபேல் டீல்..  

155
0

கிடுகிடுக்க வைத்த ரபேல் டீல்..  

ரபேல் ஒப்பந்த ஊழல் என்பது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

ரபேல் என்பது ஒரு வகையான, புதிய தலைமுறை போர் விமானம் ஆகும். இது இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும். இதன் மூலம் போர் சமயங்களில் ஒரு நாடு எளிதாக தாக்குதல் நடத்த முடியும். அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானங்கள். மிக மோசமான சூழ்நிலையில் கூட இது தாக்கு பிடிக்கும்.

ஆனால் முதலில் இந்தியாவின் தேர்வு ரபேல் விமானம் கிடையாது. ரபேல் போலவே நிறைய MMRCA ரக விமானங்கள் உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. மார்டின் எஃப் – 16, போயிங் எஃப்/ஏ 18, யூரோபைட்டர் டைபூன், ரஷ்யா மிக் 35, ஸ்வீடன் சாப் கிரிப்பேன் மற்றும் ரபேல் ஆகிய விமானங்கள் இதற்காக சோதனை செய்யப்பட்டது. கடைசியில் விலை மற்றும் தேவையை வைத்து ரபேல் தேர்வு செய்யப்பட்டது.

முதலில் இந்த ரபேல் ஒப்பந்தம் என்பது இந்திய விமான படையின் பலத்தை அதிகரிக்க செய்யப்பட இருந்தது. இதன் மூலம் புதிய ரபேல் ரக விமானங்களை வாங்கி ராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. காங்கிரஸ் அரசின் ஆட்சியில் 2001ல் இதற்காக திட்டம் போடப்பட்டு, 2007ல் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி, 2012 தொடக்கத்தில் ரபேல் விமானங்களை வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க Dassault என்ற பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்ட்டது. இரண்டு நாட்டிலும் மாற்றி மாற்றி தேர்தல் நடந்த காரணத்தால் ஒப்பந்தம் செய்யப்படாமல் தள்ளி போய் கொண்டே இருந்தது.

அதன்பின் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன்பின்தான் பாஜக ஆட்சியில்தான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது. முழுமையான ஒப்பந்தம் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று இதற்காக அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்.

காங்கிரஸ் ஒப்பந்தத்தின் படி, மொத்தம் 126 விமானங்களை இந்திய அரசு வாங்க இருந்தது. அதில் 18 விமானங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். மற்ற 108 விமானங்கள் உதிரி பாகங்களாக அனுப்பப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். Dassault என்ற நிறுவனம்தான் இந்த விமானங்களை இந்தியாவிற்கும் அளிக்கும்.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின், 126 விமானங்களை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி, வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவோம் என்றும், பிரான்ஸ் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஒரு விமானத்தை 350 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது 126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. காங்கிரஸ் ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களை ரூ 41,212 கோடிக்கு வாங்கி இருக்கலாம்.

ஆனால் பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.1321 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதவாது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது.

Dassault நிறுவனம் இந்தியாவிற்கு விற்கும் 108 உதிரி பாக விமானங்களை இந்தியாவில் வைத்து தயாரித்து முழு விமானமாக மாற்றுவார்கள். இதற்கான ஒப்பந்தம் டிஆர்டிவோ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கும் அளிக்கப்பட கையெழுத்தானது. இதனால் அந்த தொழில்நுட்பம் இந்திய அரசுக்கு கிடைக்கும். இதனால் சில வருடங்களில் நாமே ரபேல் விமானத்தை உருவாக்க முடியும்.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் இரண்டும் பாதுகாப்பு துறையில் பல காலமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் இதில் கால் வைத்தது கூட இல்லை. இப்படி இருக்கையில் அனுபவமும் இல்லாத, அதுவும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு, அதுவும் ரகசிமாக ஒரு ராணுவ ஒப்பந்தத்தை கொடுக்க காரணம் என்ன என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இதுதான் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்க போகும் அந்த ஊழலாக இருக்க போகிறது.

இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பொதுநல மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்.

  • ஏன் குறைவான ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டது?
  • ஏன் குறைவான விமானங்களை காங்கிரஸ் வைத்த விலையை விட அதிக விலைக்கு வாங்கினார்கள்?
  • ஏன் எச்ஏஏ நிறுவனம் தூக்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது?
  • ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வந்தது எப்படி? ஆகிய கேள்விகள் இதில் முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here