Home அழகப்பா பல்கலைக்கழகம் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

166
0

20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் “20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள்” என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கின் துவக்க விழா இன்று (06.12.2018) பல்கலைக்கழக லெ.சித.லெ.பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் இக்கருத்தரங்கிற்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், எழுத்துக்கள் மக்களைச் சென்றடைகிறது. எழுத்துக்களின் சுவை, கருத்துக்கள் ஆகியவற்றை வாசகர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.  இலக்கியங்களில் புதினம் மற்றும் சிறுகதைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இவ்விலக்கியங்கள் காலந்தோறும் தம்மை மாற்றிக்கொண்டுள்ளது.  காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் கலையே நிலைத்து நிற்கும். இலக்கியங்களும் அவ்வாறே காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் இயல்புடையனவாகும் என்றார்.

மேலும் அவர் ஒரு சமுதாயத்தின் நினைவாற்றலை எழுத்துக்கள் தொடர்ந்து தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும்.  அவ்வகையில கதைகளும் கதைப்பாடல்களும் சிறப்பிடம் பெறும்.  சமுதாய நிகழ்வுகள் வாய்மொழியாகப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து தலைமுறையினருக்குக் கொடுக்கப்படும்.  அவ்வாறு வாய்மொழியாக பதிவு செய்யப்படும் சமுதாய நிகழ்வுகள் ஒரு காலத்தில் எழுத்து வடிவம் பெறும்.  அவை அவ்வக்கால அரசியல், சமுதாய நிலைகளைப் பிரதிபலிக்கும் எனவும், இலக்கியங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  வாசகர்கள் பல்வேறு நூல்களைப் படிப்பதன்மூலம் புதிய பரிமாணங்களைப் பெறமுடியும். இலக்கியங்கள் நடைமுறையிலிருந்து வேறுபடுதல், கவரும் தன்மை ஆகியவற்றால் சிறப்புப் பெறுகின்றன. அத்தகைய இயல்புகளைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் சிறப்புத் தன்மைகளையும் இக்கருத்தரங்கம் வெளிகொணரும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

இக்கருத்தரங்கில் பிரான்ஸ் நாட்டின் தமிழறிஞர் திரு.ஜெ.பி.பிரசாந்த மோரே சிறப்புரையாற்றினார்.  அவர் தமது உரையில், இந்தியாவில் சிறுகதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியது மேலைநாட்டுத் தாக்கத்தால் சிறுகதை தோன்றியது என்பது தவறு எனவும், அதற்கு முன்பே சிறுகதை மரபு உள்ளது என்றும், அதற்கு பஞ்சதந்திரக் கதைகள் சிறுகதைகளின் முன்னோடி எனலாம் என்றார். சிறுகதைகள் விழுமியங்கள் வெளிப்படுத்துவன.  சிறுகதைகளில் வாழ்க்கைக்கான படிப்பினைகள், வாழ்வியல் ஒழுக்கம் போன்ற பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளன என்றார்.  மேலும், 18-ஆம் நூற்றாண்டு முதல் வளரத்தொடங்கிய சிறுகதை வகைமை தமிழில் பாரதியாரால் சிறப்பாக ஆளப்பட்டு 20-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் பேரா.அய்க்கண், பேரா.பழனிஇராகுலதாசன், தேனம்மை லெட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்க ஆய்வுக்கோவையை துணைவேந்தர் வெளியிட முதல் பிரதியை திரு.ஜெ.பி.பிரசாந்த மோரே பெற்றுக் கொண்டார். இக்கருத்தரங்கின் நிறைவு விழா மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா.த.ரா.குருமூர்த்தி தலைமையேற்று உரை நிகழ்த்தினார். சிவகங்கையை சேர்ந்த எழுத்தாளர் திரு.சந்திரகாந்தன் சிறப்புரையாற்றினார்.  மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.வாணிஜெயம் வாழ்த்துரை வழங்கினார்.  சிவகங்கையை சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.ரிஷிகேசன் கருத்தரங்க மதிப்பீட்டுரை வழங்கினார்.  முன்னதாக தமிழப்பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பேரா.சே.செந்தமிழப்பாவை அனைவரையும் வரவேற்றார்.  உதவி பேராசிரியர் முனைவர்.கா.கணநாதன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here