Home அழகப்பா பல்கலைக்கழகம் வரதட்சணை ஒழிப்பே பெண்களின் முன்னேற்றம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி

வரதட்சணை ஒழிப்பே பெண்களின் முன்னேற்றம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி

171
0

வரதட்சணை ஒழிப்பே பெண்களின் முன்னேற்றம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ஃபோர்டு தொண்டு, நிறுவனமும் இணைந்து ‘வரதட்சணை ஒழிப்பே பெண்களின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (04.12.2018) அழகப்பா பல்கலைக்கழக கருத்தரங்கில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறைத்தலைவர் பேரா.கா.மணிமேகலை அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில் முந்தைய காலத்தில் மணமகன் பெண்வீட்டாற்கு தட்சணை கொடுத்துவிட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்றும், பிறகு செல்வந்தர்கள் தமது வசதியினை ஊரார்கள் காண்பதற்காக பெண்ணிற்குத் திருமணம் செய்யும் போது பணம், பொருட்கள் மற்றும் வேலையாட்களை அனுப்பி வைத்தார்கள்.

காலப்போக்கில் அதுவே வழக்கமாகி விட்டது என்று தமது உரையில் கூறினார். மேலும் ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் இருப்பதாகவும், தினமும் 20 பெண்களில் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் இறப்பதாகவும் தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் 9ஆயிரம் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் இறந்தாலும் 2500 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது, என்று எடுத்துரைத்தார். இதைத் தவிர்க்க வேண்டும் எனில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பெற்று மன தைரியம் மற்றும் சமூகப் பொறுப்புடன் இருந்தால் மட்டுமே தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் பெண்களுக்கு அசையா சொத்துக்களுக்குப் பதிலாக பணம் மற்றும் ஆபரணங்களைக் கொடுத்துத் திருமணம் செய்து வைத்தனர் என்றும், 1900-ல் சீனாவில் 7 வயது சிறுமிகளுக்கு நடந்த பல்வேறு துன்பங்களை எடுத்துரைத்தார். சமுதாயத்தில் வரதட்சணையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தி பெற்றோர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி மன உளைச்சல்களுக்கு உட்படுத்துவதால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறினார். கல்வி ஒரு மூலதனமென்றும், பெண்கள் கல்வி கற்பதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு வழிவகுக்கின்றது. இதன் வழியாக அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமல்லாமல் வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளில் இருந்து விடுபட முடியும் என்றும் தமது உரையில் எடுத்துரைத்தார்.

மூத்த வழக்கறிஞர் திரு.ளு.P.மணிகண்டன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் வரதட்சணைக் கொடுமையால் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தார். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக எடுத்துக்கூறி, அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெண்களுக்கான நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம் மற்றும் மகளிர் காவல்நிலையம் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன என விவரித்தார். மேலும் பெண்களை பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க சட்டங்களை வலுப்படுத்துவது மட்டுமில்லாமல் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் மூலம் வரதட்சணை கொடுமைகளை தடுக்க முடியும் என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு யுனிசெஃப் நிறுவனம் தயாரித்த குறும்படத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிறைவாக ஃபோர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பால்.அழகராசன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here