Home அழகப்பா பல்கலைக்கழகம் பயிற்சி பட்டறை “இணைய வழி கற்றல், வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்”

பயிற்சி பட்டறை “இணைய வழி கற்றல், வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்”

203
0

பயிற்சி பட்டறை “இணைய வழி கற்றல், வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்”

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைய வழி கற்றல் மையத்தின் சார்பில் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரி பேராசிரியர்களுக்கு “இணைய வழி கற்றல், வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்” என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சி பட்டறை 8.11.18-அன்று பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் இப்பயிற்சி பட்டறைக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில், தற்போதைய உலகில் “டிஜிட்டல்” என்ற வார்த்தை மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது என்றும், டிஜிட்டல் என்ற வார்த்தை ஒவ்வொரு நாள் நடைமுறை வாழ்க்கையிலும் முக்கிய இடம் பெறுகிறது என்றும், அதனால் தான் “டிஜிட்டல் இந்தியா” “டிஜிட்டல் நூலகம்” போன்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவது போல் கல்வியிலும் டிஜிட்டல் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழங்களான ஹார்வர்டு, மாசாசூட் தொழில் நுட்ப நிறுவனம், ஸ்டான்போர்டு போன்றவைகளை முன்னோடிகளாக கொண்டு மத்திய அரசு “ஸ்வயம்” என்ற ஒரு இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி நாட்டிற்கு அர்பணித்துள்ளது என்றும்  இதன் வாயிலாக மாணவர்கள் இணையவழி கற்றலிலும் சிறந்து விளங்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.  2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்வயம் கடந்த 4 ஆண்டிற்குள்ளாக 800-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறது என்றார்.  தான் துணைவேந்தராகப் பணியேற்றபோது சுமார் 1000-ஆக இருந்த இணையவழி கற்றல் சேர்க்கை தற்பொழுது 2750-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பல்கலைக்கழக மானிய குழு வழங்குகின்ற விதிமுறைகளை சீரிய முறையில் பின்பற்றி இணையவழி கற்றலில் அழகப்பா பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்றார்.  மேலும் அவர் சேர்க்கையில் மட்டும் பெறுகிற வெற்றி போதாது, நமது ஆசிரியர்கள் இணையவழி கற்றல் உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தலிலும் நிபுணத்துவம் பெறவேண்டும் என்பதால்தான் இம்மாதிரியான பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படுகிறது என்றார். மேலும் இதன் வாயிலாக ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்ற இணையவழி கல்வி இனி தமிழ் மொழியிலும் வழங்க முடியும் என்றார்.

விழாவில் தொடக்க உரையாற்றிய அண்ணா பல்கலைக்கழக பல்லூடகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேரா.கௌரி அவர்கள், இணையவழி கற்றல் வழங்கும் பல்வேறு நாடுகளுக்கு மத்தியில், இந்தியா மட்டுமே முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது என்றார்.  பொதுவாக தொழில்நுட்பம் ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பரவலாக குறைத்துவிடும் என்ற பயஉணர்வு ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது.  ஆனால் உண்மையாக தொழில்நுட்பம் என்பது கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்குவது என்றார்.  மேலும் தொழில்நுட்பம் மாணவர்களுடைய தனியாள் வேற்றுமைக்குத் தகுந்தார் போல் கற்பித்தலை திட்டமிடப் பயன்படுகிறது.  அதனால்தான் நம்நாட்டில் 30 பல்லூடகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.  குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் உள்ள பல்லூடகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இளைய தலைமுறையின் வகுப்பறை தாண்டிய கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று கூறினார்.

முன்னதாக பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக பல்லூடகக் கல்வி ஆராய்ச்சி மைய இயக்குநர் அருள்செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.  பல்கலைக்கழக ஸ்வயம் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.  ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ராமலிங்கம் நன்றி கூறினார்.  முனைவர்.ராம்நாத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here