Home அழகப்பா பல்கலைக்கழகம் “நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் சமீபத்திய போக்குகள்” – இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா

“நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் சமீபத்திய போக்குகள்” – இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா

190
0

“நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் சமீபத்திய போக்குகள்” – இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை சார்பாக “நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் சமீபத்திய போக்குகள்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா இன்று (24.01.2019) பல்கலைக்கழக அறிவியல் வளாக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் இக்கருத்தரங்கிற்கு தலைமையேற்று உரைநிகழ்த்தினார். அவர் தமது உரையில், ஆராய்ச்சியாளர்கள் சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்றார். ஆராய்ச்சி என்பது முழு ஈடுபாட்டுடன் செய்யக் கூடிய ஒரு செயலாகும் என்றும், அதனை நாகரிகம் கருதி செய்யகூடிய ஒரு செயலாக மட்டும் கருதாமல் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ளகூடிய பணியாக அதனை கருத வேண்டும் எனத் தெரிவித்தார். புதுமையை படைக்க வேண்டும் என்ற உணர்வு ஒரு ஆராய்ச்சியாளரின் உண்மையான அடையாளமாகும். சிறந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளதாகவும், அதே நேரத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாவதற்கும் துணைபுரிய வேண்டும் என்றார். இந்தியாவைப் பொறுத்தமட்டில் விஞ்ஞானி சர்.சி.வி.இராமனுக்குப் பிறகு அறிவியல் துறையில் ஒருவர் கூட நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்ற கருத்தை சுட்டிக்காட்டி, இந்திய விஞ்ஞானிகள் மிகச் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நோபல் பரிசை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார். பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை புகழ்மிக்க ஆய்வு இதழ்களில் வெளியிட்டு ஸ்கோபஸ் இன்டெக்ஸில் அதிக புள்ளிகள் பெற வேண்டுமென்றார்.

தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி முனைவர் எம்.சுதாகர் அவர்கள் இக்கருத்தரங்கினை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், நுண்ணுயிரில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக்குகள் எளிதில் மக்கக் கூடியவை என்றும் அது சுற்றுச்சுழலுக்கு உகந்தது என்றும் குறிப்பிட்டார். வேதியியல் பொருட்கள் கலந்த மக்காத பிளாஸ்டிக்குகள் மண்ணோடு கலப்பதால் நீர்வளத்தையும், இயற்கை வளத்தையும் மாசுபடுத்துகிறது. எனவே நுண்ணுயிரியல் துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்காத பயனுள்ள பொருட்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மாணவர்கள் ஆழமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு தங்களுடைய அறிவையும், மற்ற திறன்களையும் வளர்த்துக்கொண்டு தானும் வளர்ந்து, சமுதாயமும் வளர்ச்சியடைய பாடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய குறுந்தகடு துணைவேந்தர் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் குறுந்தகட்டினை சிறப்பு விருந்தினர் முனைவர் எம்.சுதாகர் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தும், ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்தும் மற்றும் அயல்நாட்டு பிரதிநிதிகள் உள்பட 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அறிவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

முன்னதாக முனைவர் அ.அருண், நுண்ணுயிரியல் துறைத்தலைவர் (பொ) வரவேற்புரை ஆற்றி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். உதவி பேராசிரியை முனைவர் டி.கவிதா நன்றி கூறினார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here