Home அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத்தில் – சர்தேச மாற்றுத்திறனாளிகள் தினம்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் – சர்தேச மாற்றுத்திறனாளிகள் தினம்

158
0

அழகப்பா பல்கலைக்கழகத்தில் – சர்தேச மாற்றுத்திறனாளிகள் தினம்

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை, மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு மையம் மற்றும் பல்வகை ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் தயாரிக்கும் மையம் ஆகியவற்றின் சார்பில் சர்தேச மாற்றுத்திறனாளிகள் தினம்-2018 டிசம்பர் 4ஆம் நாள் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பழனியப்பா செட்டியார் அரங்கத்தில் இனிதே நடந்தது. துறைத்தலைவர் திருமதி.ஜெ.சுஜாதாமாலினி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரைநிகழ்த்தினார். அவர் தமது உரையில் தமிழகத்திலேயே முதல் பல்கலைக்கழகமாக நமது பல்கலைக்கழகம் மாற்றுத் திறனாளிக்களுக்காக ஒரு துறையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்கலைக்கழகத்தில் பல சிறப்பு சலுகைகளையும் உதவிகளையும் வழங்குகிறது. மேலும் நமது பல்கலைக்கழகத்தில் அவர்களுக்கென ஒரு சிறப்பு பள்ளியும் இயங்கி வருகிறது இதில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இவ்வளவு சிறப்பாக பயிற்சியளித்து அவர்களது அறிவையும், மனதையும் ஒருங்கிணைத்து திறமைகளை வெளிக்கொணர்ந்த சிறப்புப் பள்ளி ஆசிரியர்களை மனதார பாராட்டினார். வீட்டில் பெற்றோர்களும், பள்ளியில் ஆசிரியர்களும் மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் அன்பு காட்டி அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க துணைபுரிய வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் சேவை செய்ய வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகம் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேரா.ஆர்.திருமலைச்சாமி இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அந்த சிறப்பாசிரியர்களை உருவாக்குவதில் அழகப்பா பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் பெருமிதம் அடைகிறேன். வருங்கால சந்ததியர் மாற்றுத்திறனாளிகளை வேறுபடுத்திப் பார்க்காமல் சமுதாயத்தில் ஒருவராக இணைத்து கொள்ள வேண்டும் என்பதே மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் செய்யும் கடமையாகும் என்றார். இந்தியாவில் சுமார் 9 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அரசினால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பெரும்பாலான நலத்திட்ட உதவிகள் நகர்புறங்களிலுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, கிராமப்புறங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடைய வேண்டும் என குறிப்பிட்டார்.

திரு. சரவணகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர், சிவகங்கை மாவட்டம், தமது வாழ்த்துரையில், இந்தியாவிலேயே தமிழகம் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது என்றார். தமிழகத்தில் 11.79 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் 29,750 பேர் உள்ளனர். இவர்களுள் 11,450 பேர் பத்து வயத்திற்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். இவர்களில் இந்தாண்டு மட்டும் 3,724 பேர் தமிழக அரசின் ரூ.56 இலட்சம் மதிப்பிலான நல உதவித்திட்டங்களை பெற்றுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே சென்னை மற்றும் சிவகங்கையில் மட்டுமே பிறந்த குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடுகளை கண்டறியும் வசதி உள்ளது என குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளால் முடியாதது என எதுவுமில்லை அவர்களுடைய சீரிய தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இவற்றினால் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்றார்.

கல்வியியல் புல முதன்மையர் பேராசிரியர் திரு. தர்மலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எட்டு சிறப்பு பள்ளிகள் மற்றும் சர்வ சிக்ஷா அபியான் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு மையத்தை சோர்ந்த பேரா.முரளிராஜன் நன்றி கூறினார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here