Home அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத்தில்  திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு  இரங்கல்

அழகப்பா பல்கலைக்கழகத்தில்  திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு  இரங்கல்

192
0

அழகப்பா பல்கலைக்கழகத்தில்  திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு  இரங்கல்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சார்பில் தொல்லியல் அறிஞரும், முன்னாள் இந்திய ஆட்சி பணி அதிகாரியும், தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கடந்த 26.11.2018 திங்கள் கிழமையன்று இயற்கை எய்தியதை முன்னிட்டு அன்னாருக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு நேற்று  27.11.2018 (செவ்வாய்கிழமை) இரங்கல் கூட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இரங்கல் கூட்டத்தில் துணைவேந்தர் அவர்கள் தெரிவித்தாவது: கடந்த 1990ஆம் ஆண்டு திருச்சி தில்லை நகரில் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களை தான் முதன் முதலாக சந்தித்ததாகவும், அவருடைய சிந்து சமவெளி சித்திர எழுத்துக்கள் பற்றிய அறிவார்ந்த உரையை கேட்கும்  வாய்ப்பு அப்போது கிடைத்ததையும், தான் தமிழ்நாடு வரலாற்று பேரவையின் பொதுச் செயலாளராக இருந்த போது அவருடன் நெருங்கி பழக வாய்ப்புக் கிடைத்ததையும், 2009ஆம் ஆண்டில் அவருக்கு தமிழ்நாடு வரலாற்று பேரவை சார்பாக சிறந்த தொல்லியல் அறிஞருக்கான விருது வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

கல்வெட்டியல் அறிஞர், இந்திய ஆட்சிப் பணியில் சிறந்த நிர்வாகி, தலைசிறந்த பத்திரிக்கையாளர், வரலாற்று அறிஞர் எனப் பன்முக தன்மை கொண்டவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள். மத்திய மாநில அரசுகளின் விருதுகளான பத்மஸ்ரீ விருது, தொல்காப்பியர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் சிந்து சமவெளி எழுத்துக்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்வதற்காக 1970ல் ஜவஹர்லால் நேரு நிதியுதவியும் இவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்றார்.

இவருடைய சீரிய மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் தமிழ் மொழியின் தொன்மையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன என்றும் தினமணி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றிய போது எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டார்.

அன்னாரது மறைவு தமிழ் மற்றும் வரலாற்று ஆய்விற்கும் குறிப்பாக தொல்லியல் ஆய்விற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும் என்றார். தமிழ் மொழியின் தொன்மை குறித்து பேசப்படும் வரை அவரது புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும் என்று மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அன்னாரது ஆன்மா சாந்தியடையும் பொருட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த இரங்கல் கூட்டத்தில் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை, சமூகப் பணி, மகளிரியல் துறை, பொருளாதாரத் துறை, தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைச் சார்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here