Home அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத்தில்  குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் 

அழகப்பா பல்கலைக்கழகத்தில்  குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் 

187
0

அழகப்பா பல்கலைக்கழகத்தில்  குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் 

அழகப்பா பல்கலைக்கழக நேரு படிப்பு மையம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஐடுரூ IL & FS திறன் மேம்பாட்டு மையம் ஆகியன இணைந்து 14.11.2018 அன்று குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியினை பல்கலைக்கழக லெ.சித.லெ.பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கத்தில் நடத்தியது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினர்.  அவர் தமது உரையில் மாணவர்கள் ஒழுக்கத்தையும் நேர்மையையும் நற்பண்பையும் இளமையிலே பெற வேண்டும் என்றார். மிகப்பெரிய செல்வந்தர் வழி வந்த பண்டித நேரு அவர்கள் தனது தந்தையாரிடம் மிகவும் பணிவோடும் பண்போடும் நடந்து கொண்டார்.  அவர் தனது இளமைக்காலக் கல்வியை இக்காலக் கல்வியைப் போல் மகிழ்ச்சியாக பயில அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சியான கல்வியை பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையப்பெற்றுள்ளது. உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது. நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் எந்நாளும் கற்பதை மறக்காதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தேவகோட்டை சார் ஆட்சியர் திருமதி ஆஷாஅஜித், இ.ஆ.ப. அவர்கள் தனது சிறப்புரையில் மாணவ மாணவிகள் உயர்ந்தோங்கும் எண்ணத்தோடும், இலக்குடனும் தங்களது கல்வியை கற்றிட முன் வர வேண்டும்.  உழைப்பவர்க்கே இவ்வுலகம் சொந்தம் என்றும், தெரிந்த கலைகளை கற்று அதில் சிறந்து விளங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  நல்ல வாய்ப்புகள் கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டு குழந்தைகள் நேர்மையுடனும், உறுதியுடனும், ஒற்றுமையுடனும் பாடு பட வேண்டும் என வாழ்த்தி பேசினார்.

தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் சாமி சத்தியமூர்த்தி அவர்கள் தனது வாழ்த்துரையில் இளமையில் கற்பதை ஆர்வத்துடன் கற்றால் எந்நிலையிலும் உயர முடியும் என்றார். மாணவர்கள் பெற்றோரையும், ஆசிரியரையும், உற்றாரையும், நண்பரையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் ராசா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு துணைவேந்தர், சார் ஆட்சியர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நேரு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.சந்திரமோகன் வரவேற்புரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.கிரு ஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here