Home இது எங்க ஏரியா நல்லது, நினைக்க

நல்லது, நினைக்க

189
0

நல்லது, நினைக்க

ஊரே இரண்டு கட்சியாகப் பிரிந்து நின்றது. சாரதி அப்படிச் செய்யக்கூடியவன் அல்ல; ஒழுக்கமானவன். என ஒரு பிரிவும், எந்த ஆணையும் நம்புவதற்கில்லை, வேலை தருவதாக ஆசைகாட்டி அதையே தனக்கு சாதகமாக்கிக்கொள்ளலாமில்லையா?

எந்த ஒரு பெண்ணும் இந்த விஷயத்தில் பொய் சொல்லமாட்டாள்……”என மற்றொரு பிரிவும் வாதிட்டனர்.

எங்கு பார்த்தாலும், உலகமுழுவதும், இப்போது இதுதானே பெண்களின் குமுறல்! வேலைக்கு செல்லும் பெண்களை, அதிகாரத்திலுள்ள ஆண்கள் அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதுதானே அமெரிக்கா, லண்டன், டில்லி, சினிமாத்துறை, கல்வித்துறை, நீதித்துறை, அரசுத்துறை, எங்கணும் பேச்சு!

நீதி கேட்டு குமுறும் பெண்களை மற்ற பெண்களும், குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை பிற ஆண்களும், இரு அணிகளாக நின்று ஊரே அசிங்கப்பட்டு நிற்கிறது.

நம்ம ஹீரோ சாரதியைப் பற்றி தெரிந்துகொள்வோமா?

சாரதி, பள்ளிப் பருவத்திலேயே, பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடல்களில் மூழ்கி எழுந்தவன்.

ஏழ்மையை விரட்டவும், பெண்களுக்கு சம உரிமை அளிக்கவும், மக்களாட்சியை வலுப்படுத்தவும், தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்ள முடிவெடுத்தவன்!

ஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்

பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே, இவைகளை பரப்புவதைக் காட்டிலும், நடைமுறையில் செயல்படுத்த தீவிரம் காட்டினான்.

காலம் கைகூடி வந்தது! படிப்பு முடிந்ததும், மற்றவர்களைப் போல, அவன் வேலைக்கு மனுப்போடவில்லை, யோசித்தான்.

அவன் சுதந்திர சுபாவத்துக்கு, கைகட்டி எவரிடமும் வேலை செய்யமுடியாது. ஏழைகளுக்கு வேலை தந்து அவர்கள் பசியாற்றவேண்டும், குறிப்பாக பெண்களுக்கு நிறைய வாய்ப்பு தரவேண்டும், மக்களிடையே பணியாற்றவேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்ற, முடிவெடுத்தான்.

ஆம், பெண்கள் சுலபமாக கற்றுக்கொள்ளக்கூடிய தையற்கலை, உணவு தயாரித்தலை அடிப்படையாக வைத்து, பஸ் நிலயம் அருகே இடம் பிடித்து, ஒரு சிற்றுண்டி கடையையும், பக்கத்திலேயே ஒரு தையல் கடையையும் துவங்கினான்.

சிற்றுண்டி கடைக்கு அன்னலட்சுமி பவன் என்றும், தையற்கடைக்கு தையல்நாயகி கடை எனவும் பெயர் வைத்தான்.

அவன் முதல் போட்டு, கடை துவங்கி, மளிகைப் பொருட்கள், தையல் மிஷின்கள், மேஜை, நாற்காலிகள் முதலியவை வாங்கித் தந்து, மேற்பார்வை பார்த்தானே தவிர, பெண்களையே தொழில் நடத்த ஊக்கம் தந்தான்.

சிற்றுண்டி கடையில், நாலு பெண்களும், தையற்கடையில் எட்டு பெண்களும், பணிபுரிந்தனர்.

சிறுகச் சிறுக, இரு கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பெருகி, வியாபாரம் அதிகரித்து, பணவரவு வந்ததும், ஊழியர்களின் ஊதியத்தை இருமடங்காக்கியதோடு, சீருடையும் வாங்கித்தந்தான்.

இரு கடைகளும், வட்டாரத்தில், நல்ல பெயர் எடுத்து, பிரபலமாகின.

ஒருநாள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சாரதியை கௌரவிக்க முடிவெடுத்து, அவனிடம் தெரிவித்தனர்.

“ஐயா! எங்க வாழ்க்கையிலே விளக்கேற்றிவைத்த உங்களை கௌரவிக்க ஆசைப்படுகிறோம். அதற்கு மண்டபம் வாடகைக்கு எடுத்து, பாராட்டுவிழா நடத்தி, அதற்கு முதலமைச்சரை அழைத்து, தலைமை தாங்கவைத்து, அவரை உங்களுக்கு பொன்னாடை போர்த்தச் சொல்ல முடிவெடுத்திருக்கிறோம். நீங்க தயவுபண்ணி சம்மதிக்கணும்…….”

சாரதி சிரித்தான்.

“நீங்க உழைத்தீர்கள், பலன் கிடைத்தது, வருவாயில் ஊதியமும் சீருடையும் எடுத்துக்கொண்டீர்கள். இதில், என் பங்கு அதிகமில்லை, முதல் போட்டதைத் தவிர! அந்த முதலையும் இந்த இரண்டு ஆண்டுகளில், திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இவை உங்கள் உடைமை! சொத்து! ஒற்றுமையாக மேலும் தொழிலில் விருத்தியடைந்து, இன்னும் அதிக பெண்களுக்கு வேலை தந்து வாழ்வு கொடுங்கள். எனக்கு அதுதான் நீங்கள் செய்யும் பாராட்டு!”

சாரதி சொல்லிமுடித்ததும், அத்தனை பெண்களும் அவன் காலில் விழுந்தனர். சிலர் கண்ணீர் வடித்தனர். சிலர் பிரமித்து பேச்சற்று சிலையாயினர்.

“ஐயா! என்றைக்குமே, நீங்கதான் எங்களுக்கு முதலாளி! நாங்கள் உங்கள் தொழிலாளிகள்தான். அதுவே எங்களுக்கு பெருமை!” என்று மனப்பூர்வமாகச் சொன்னார்கள்.

அந்த அளவுக்கு பெண்களால் மதிக்கப்படுகிற சாரதியின் மீதா இன்று புதிதாக ஒருத்தி சேற்றை வீசுகிறாள்!

“சாரதி நல்லவர்தான்! பல வருஷமா பல பெண்களுக்கு வாழ்வு தந்தவர்தான். இல்லைன்னு சொல்லவில்லை., ஆனால், அவரும் ஒரு ஆம்பளைதானே, அதுவும் முப்பது வயது தாண்டியும் கல்யாணமாகாத பிரும்மசாரிதானே! இந்தப் பெண்ணும் நவநாகரிகமா மேலேயும் கீழேயும் உடம்பு தெரியும்படியா டிரஸ் போட்டிருக்கு! ஏதோ, ஒரு பலவீனமான நேரத்திலே, சபலப்பட்டு தப்பா நடந்திருக்கலாம், ஏன்னா, எந்தப் பெண்ணும், தன்னை ஒருத்தன் கெடுக்க முயற்சித்தான்னு, வெளிப்படையா பொய் சொல்லமாட்டா…….”

சாரதி என்ன சொல்கிறான் என தெரிந்துகொள்ள, அவன் ஊழியர்களுக்கு ஒரு ஆவல்!

அவன் அறைக்கு அனைவரும் ஓடிவந்தனர். அவனோ, அறையிலிருந்த கணக்கு நோட்டுகள், வாடகை ரசீதுகள், வருமானவரி கட்டிய சலான்கள், ஆடிட்டர் குறிப்புகள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி யாரிடமோ கொடுப்பதற்கு, தயாராக வைத்திருந்தான்.

“வாங்க! வாங்க! நீங்க வரலேன்னாலும், நானே அழைத்திருப்பேன். இப்ப, நீங்க மொத்தம் பதினைந்துபேர் இருக்கீங்க, உங்களுக்குள்ள ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளரை தேர்ந்தெடுங்க! அந்த மூணுபேரிடத்திலே, எல்லா கணக்குவழக்குகளையும் இப்பவே ஒப்படைச்சுடறேன், ஆடிட்டரையும் உங்களுக்கு எல்லா உதவியும் செய்யச்சொல்றேன்! நான் உடனடியா  விலகிக்கிறேன், எல்லா பொறுப்புகளிலிருந்தும்! ………”

“இல்லே, நீங்க போக கூடாது! எங்களுடனேயே தொடர்ந்து இருக்கணும். ……..”

“எனக்கும் உங்களைவிட்டுப் பிரிய மனமில்லே, ஆனா, என்னாலே உங்க பேருக்கோ, நீங்க நடத்தற கடைகளுக்கோ, கெட்டபெயர் வருவதை என்னால் ஏற்றுக்கமுடியாது. அதனாலேதான்……..”

” ஐயா! எவளோ ஒரு சின்னப்பொண்ணு , நம்ம யாருக்கும் முன்னேபின்னே தெரியாதவ, ஏதோ சொல்லிட்டான்னு நீங்க எங்களை கைவிடறது, சரியா? தவிர, அவ யாரு? எப்ப உங்களை பார்த்தா? அவ சொல்றது உண்மையா? இதெல்லாம் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ளத்தான், நாங்க இப்ப இங்க வந்திருக்கோம்……”

சாரதி சிரித்தான்!

“ஏன் சிரிக்கிறீங்க? நாங்க ஏதாவது தப்பா சொல்லிட்டோமா?”

சாரதியின் கண்கள் கலங்கியிருந்தன, முகத்தை கவிழ்த்துக்கொண்டான்.

எல்லோரும் அவனருகே சுற்றிநின்று தவியாய் தவித்தனர். என்ன செய்வதென அறியாமல் விழித்தனர்.

சாரதி தொண்டையை கனைத்துக்கொண்டு, பேசினான்.

” நான் தோற்றுப்போய்விட்டேன். இத்தனை காலமாக என்னையே முற்றிலுமாக மறந்து உங்களில் ஒருவனாக வாழ்ந்துவருகிறேன். நீங்கள்தான் எனக்கு தாய், சகோதரி, மகள், ஏன் தெய்வம், என்றிருந்தேன். இன்று நீங்களே ஊர்பேர் தெரியாத யாரோ ஒரு பெண் ஏதோ என்மீது அவதூறா சொன்னது உண்மையான்னு தெரிஞ்சிக்க ஓடிவந்திருக்கீங்களே, ஒரு வினாடி யோசித்துப்பார்த்தீங்களா, நான் அவ சொல்றாமாதிரி, நடந்துகொண்டிருப்பேனா? நான் அப்படிப்பட்டவனா? இத்தனை வருஷம் உங்க பதினைந்துபேரோட இரவும் பகலுமா பழகறேனே, ஒருநாள் உங்களிலே யாராவது ஒருத்தருக்கு ஒரு தீங்கு என்னாலே ஏற்பட்டிருக்குமா? என்விரல் உங்க உடம்பிலே தப்பான எண்ணத்தோட பட்டிருக்குமா? என்மீது உங்களுக்கு எப்படி சந்தேகம் வரலாம்? உண்மையை தெரிஞ்சிக்க இங்க வந்திருக்கோம்னு சொல்றீங்களே, அதற்கு என்ன அர்த்தம்? ஒருவேளை அவ சொன்னது உண்மையாயிருக்குமோன்னு நினைக்கிறதினாலே தானே! அதாவது ஒருவேளை நான் அவளிடம் தப்பாக நடந்திருக்கலாமோன்னு ஒரு விழுக்காடு சந்தேகம் இருக்கிறதுனாலேதானே? அங்கேதான் நான் தோற்றுவிட்டேன்! என் லட்சியம், நட்பு, உறவு, நல்லெண்ணம், பெண்களுக்கு நான் தருகிற மரியாதை, ஏழைகளுக்கு உதவுகிற இரக்கம் எல்லாமே கீழே விழுந்து தூள்தூளாகி மண்ணோடு மண்ணாகிவிட்டது. இனியும் வாழவேண்டுமான்னு யோசிக்கத் தூண்டுது. தற்கொலை……”

“ஐயா! தப்பு பண்ணிட்டோம், ஐயா! மன்னிச்சிடுங்கையா! நீங்க பேசினதைக்கேட்டு, நாங்க இப்ப தற்கொலை பண்ணிக்க நினைக்கிறோம்! மிகப் பெரிய தப்பு செஞ்சுட்டோம். கடவுளே! இப்ப என்ன செய்வோம்!”

சுவற்றில் முட்டி மோதிக்கொண்டு அழுதனர்.

சாரதி தனது மனக்குமுறலை அழித்துக்கொண்டு, அவர்களை சமாதானப்படுத்தினான்.

” நீங்க தப்பு செய்யலை, நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டேன், நடந்தது என்னன்னு தெரிஞ்சிக்க வந்திருக்கீங்களேதவிர,   நான் தப்பு செஞ்சிருப்பேனோன்னு சந்தேகப்படலை, என்னை மன்னிச்சிடுங்க! இப்ப, நான் சொல்றதை கேளுங்க! அழுகையை நிறுத்துங்க!”

சிறிது நேரத்தில், அனைத்து பெண்களும் சமாதானமாகி, சாரதி சொல்வதை கேட்க தயாராயினர்.

” உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை சொல்றேன்! நாம ஒற்றுமையா செயல்பட்டு, வெற்றிகரமா, வியாபாரத்தை நடத்துகிறதனாலே, சுற்றியிருக்கிற வியாபாரிகள் சிலருக்கு பொறாமை! நம்ம வியாபாரத்துக்கு கெட்டபேர் ஏற்படுத்தணுங்கிறதுக்காக, சூழ்ச்சி பண்ணி இந்தப் பெண்ணை அனுப்பி புரளி கிளப்பியிருக்காங்க! இப்ப எங்க பார்த்தாலும் ‘மீடு’ இயக்கம்னு சொல்லிக்கிட்டு, நிறைய அவதூறுகள் வெளிவரதில்லையா, அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நாடகமாடியிருக்காங்க! தவிர, இன்னொரு விஷயம்! எனக்கு மக்களிடையே திடீர்னு நல்லபேர் அதிகரிக்கிறதைப் பார்த்து இப்ப இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருக்கிறவர், விரைவிலே நடக்கப்போகிற தேர்தல்லே அவருக்கு எதிரா நான் எங்கே போட்டி போடுவேனோன்னு பயந்து அவரும் இந்த நாடகத்தை ஆதரிக்கிறார். இதுதான் இன்றைய உலகம்! நமக்கு விரோதிகள் வெளியே இல்லே, நமக்குள்ளேதான்!……சரியோ, தவறோ, இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதானே ஆகணும். நெருப்புக்கோழி, மண்ணுக்குள்ளே தலையை புதைச்சிக்கிறாப்போலே, இருக்கமுடியுமா? அதனாலேதான், உங்க நன்மைக்காக, தொழில் பாதிக்கப்படக்கூடாதுங்கிறதுக்காக, பெண்கள் முன்னேற்ற இயக்கம் தடைப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக,

சூதுபண்றவன் ஜெயிக்கவிடக்கூடாதென்பதற்காக, நான் ஒதுங்கிக்கிறேன். ஆனா, கவனித்துக்கொண்டுதான் இருப்பேன். உதவின்னா ஓடோடி வருவேன்! தைரியமா எடுத்து நடத்தி கடைகளை வெற்றியடையச் செய்யுங்க! நான் சும்மா இருக்கப்போகிறதில்லே, வேறெந்த துறைகளிலே பெண்கள் தொழில் நடத்தி வெற்றி பெறமுடியும் என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு உதவப்போறேன். நான் கொஞ்ச காலத்துக்கு உங்களிடமிருந்து விலகியிருப்பது உங்களுக்கு, எனக்கு, இருவருக்குமே நல்லது! நான் வரேன்”

சாரதி நடந்து, இருளில் மறைந்துபோவதை பார்த்துக்கொண்டிருந்த பதினைந்து ஜோடி கண்களில் குளம் கட்டியிருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here