Home ஆன்மீகம் தூய்மையின் பயணம்

தூய்மையின் பயணம்

50
0

தூய்மையின் பயணம்

இறைவனின் பாடுகளையும், அது தருகின்ற மகிமையையும், இறைவனின் கிருபையையும் இதயத்தில் ஏந்துவோம். நமது வாழ்க்கையை தூயதாய் மாற்றுவோம்.

விவிலியத்திலுள்ள நூல்களில் முக்கியமான ஒரு நூல் பேதுருவின் நூல். பேதுரு, ‘தன்னை இயேசு கிறிஸ்துவின் திருத்தூதன்’ என அடையாளப்படுத்துகிறார் (1 பேதுரு 1:1).

அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதை திருத்தூதர் பணிகள் 4-ம் அதிகாரம் நமக்குச் சொல்கிறது. அதாவது முறையான கல்வியை அவர் பெற்றிருக்கவில்லை.

முறையான கல்வியற்ற ஒருவராய் இருந்தாலும் ஆவியானவர் நினைத்தால் அவரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அறிவும், ஞானமும் உள்ளவராக மாற்ற முடியும் என்பதை பேதுருவின் வாழ்க்கை நமக்கு வெளிக்காட்டுகிறது.

“கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்” என்கிறது விவிலியம் (1 கொரி 1:27).

சீமோனாக இருந்த அந்த சீடரை ‘பேதுரு’ என இயேசு மாற்றுகிறார். இந்த இரண்டு பெயர்களும் கிறிஸ்தவனின் இரண்டு தன்மைகளைக் குறிக்கின்றன. பழைய மனிதன் சீமோன், அது தோல்வியடைகிற இயல்புடைய ஒன்று. புதிய சுபாவம் பேதுரு. அது வெற்றி தரக்கூடியது. அது ஆண்டவரால் கொடுக்கப்பட்ட பெயர்.

சீமோன் ஒரு சாதாரண மனிதனாக, கடவுளால் களிமண்ணாக உருவானவன். அவனை கடவுள் ஒரு பாறையாக மாற்றுகிறார். இது சீமோன் பேதுருவின் வாழ்க்கையில் நடைபெறுகின்ற மாற்றம். இது பேதுருவின் வாழ்வில் மட்டும் நிகழ்கின்ற நிகழ்வு அல்ல. நம் எல்லாருடைய வாழ்விலும் நிகழ்கின்ற செயல். ஊனியல்பின்படி மனிதனாக பிறக்கின்ற ஒருவரை இறைவன் எடுத்து மிக உயரிய பாத்திரமாக மாற்றுகிறார்.

பவுலும் பேதுருவும் அந்தக்காலத்தில் முக்கியமான திருத்தூதர்களாக இருந்தவர்கள். பவுல் பிற இன மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பேதுருவோ யூத மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சகோதரர்களை ஸ்திரப்படுத்துற ஒருவராகவும், மந்தையை மேய்க்கிறவராகவும் பேதுருவை இறைவன் மாற்றினார்.

பேதுரு எழுதிய நூலானது ‘புத்தி சொல்வதற்காக எழுதப்பட்ட ஒரு கடிதம்’. பாடு அனுபவித்தலைப் பற்றிய சிந்தனைகள், இந்தக்கடிதம் முழுவதும் நிரம்பியிருப்பதை நாம் பார்க்கலாம். அத்துடன் மகிமையைப் பற்றிய கருத்தும் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிலுவையை நாம் பார்க்கும்போது, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்க்கும் போது, வலியின் எண்ணம் நமக்கு வருகிறது. ஏன் அவர் சிலுவையில் தொங்கினார் என்பதைத் தியானிக்கும் போது அது கொண்டு வருகின்ற மகிமையும் நமது சிந்தனையில் வருகிறது.

பேதுருவின் நூல் முழுவதும் ‘கிருபை’ என்கிற வார்த்தை அழுத்தமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படைக் காரணம், பாடு அனுபவித்தல் கொண்டு வருகின்ற மகிமையை நமக்குப் பெற்றுத் தருவது இறைவனின் கிருபை என்பது தான். கிருபையினால் மட்டுமே இது நிகழ்கிறது.

மாசு படிந்த உலகில் தூய்மையான வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நியாயத் தீர்ப்பு எனும் இறுதித் தீர்ப்பு நாளைக் குறித்த அச்சம் நமக்குத் தேவையில்லை. தூய்மையான வாழ்க்கை வாழ்வது மட்டுமே அவசியம் என்பதை பேதுரு வலியுறுத்துகிறார். இறைவன் பரிசுத்தமாகவும், நீதிமானாகவும் இருப்பதால் அவர் எப்போதும் பாவத்தோடு சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்.

அவர் மன்னிக்கிறவர், இரக்கமுடையவர். ஆனால் மக்கள் பாவத்தில் அமிழ்ந்து வாழ அனுமதிக்காதவர். எந்தப் பாவியையும் ஏற்றுக்கொள்ள அவர் தயங்குவதில்லை. ஆனால் பாவத்தில் மகிழ்ந்து வாழ்வதை அவர் அனுமதிப்பதில்லை. அவர் பாவத்தை வெறுக்கிறவர், பாவிகளை நேசிக்கிறவர்.

ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்த கணக்கைக் கொடுத்து, அதற்கான பலனை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நாள் தான் நியாயத் தீர்ப்பு. நாம் அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே நமக்கு அவர் இட்ட பணியை நிறைவேற்றி அதன் கணக்கை அவரிடம் கொடுக்க வேண்டும்.

திருவிருந்தின் போது இறைவனுடைய பாடு, மரணம் போன்றவற்றை நினைவு கூருகிறோம். அப்போது நாம் மீட்கப்பட்டவர்கள் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்தல் என்பது தூய்மையான வாழ்க்கை வாழ நம்மை தூண்டும் செயல்.

ஒரு அடிமையை மீட்க வேண்டுமெனில் பணம் போதும். ஆனால் பாவத்துக்கு அடிமையாக வாழ்பவன் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், பாவத்தை பணத்தால் சரிசெய்ய முடியாது என்பது தான். இறைவனின் ஆவியினாலும், அவருடைய கிருபையினாலும் தான் நாம் மீட்கப்படுகிறோம். நமது செயல்களினாலோ, பணத்தினாலோ அல்ல.

எகிப்தை விட்டு மோசேயினால் மீட்டுக்கொண்டு வரப்பட்ட மக்கள், தங்கள் சிந்தனைகளில் இருந்து எகிப்தை அழிக்கவில்லை. அதே போல நாமும் புதிய மீட்புக்குள் நுழையும் போது பாவ வாழ்க்கையை மனதை விட்டு அழிக்காமல் இருந்தால் நிலைவாழ்வை அடைய முடியாது.

இறைவனின் பாடுகளையும், அது தருகின்ற மகிமையையும், இறைவனின் கிருபையையும் இதயத்தில் ஏந்துவோம். நமது வாழ்க்கையை தூயதாய் மாற்றுவோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here