Home நாட்டு நடப்பு முற்றுகிறது ஜாக்டோ – ஜியோ போராட்டம்; என்னதான் பிரச்சனை?

முற்றுகிறது ஜாக்டோ – ஜியோ போராட்டம்; என்னதான் பிரச்சனை?

11
0

முற்றுகிறது ஜாக்டோ – ஜியோ போராட்டம்; என்னதான் பிரச்சனை?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் – அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை.

போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்கிறது நீதிமன்றம்.

தமிழ்நாடு முழுவதும் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ என்ற ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் இயங்கிவரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறிவந்த தமிழக அரசு, பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தச் செய்துவருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் எழிலகம் அருகே மறியல் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் சாத்தியமற்றவை என அரசு தெரிவித்துள்ள நிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன என்பது குறித்து ஜாக்டோ ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யநாதன் கூறியதாவது:-

“2003ல் இருந்து அமலில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். பழைய முறையையே கொண்டுவர வேண்டும். அதேபோல, ஒரு மாத இடைவெளியில் ஒரே பணியில் சேர்ந்தவர்களுக்கு இடையில் மிகப் பெரிய ஊதிய வித்தியாசம் இருக்கிறது. அதைச் சரிசெய்ய வேண்டுமெனக் கோருகிறோம். அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி, அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டுமெனக் கோருகிறோம். மேலும், இனிமேல் பல அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க அரசாணை வழங்கப்பட்டது. இது எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும். அதை நீக்க வேண்டுமெனக் கோருகிறோம். பல பள்ளிக்கூடங்களை மூடவும் இணைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதைச் செய்யக்கூடாது என்கிறோம். இப்படி பள்ளிக்கூடங்களை இணைப்பதால் பல தலைமையாசிரியர் பணியிடங்கள் இல்லாமல் போய்விடும். ஒருவர் தலைமையாசிரியர் ஆக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும் ஊதியக் கமிஷன் ஊதியத்தை அறிவித்த பிறகு, விடுபட்டுப் போன 21 மாத நிலுவைத் தொகையை தர வேண்டும் என்கிறோம்” என்று கூறினார் சத்யநாதன்.

ஆனால், மாநில அரசு மிக மோசமான நிதி நிலையுடன் இயங்கும் நிலையில், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. இது தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஓய்வூதிய நிதிச் சுமையின் காரணமாக உலகம் முழுவதுமே புதிய ஓய்வூதிய முறைதான் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலப் பணிகளுக்கு நிதியே இல்லாமல் போய்விடும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊழியர்களுக்கான சம்பளத்தையே கடன் பெற்றுத்தான் தர வேண்டியிருக்கும். ஆகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என அரசு தெரிவித்துள்ளது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை 2016ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டிய நிலையில், 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அமல்படுத்தியதால், விடுபட்டுப்போன 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையை வழங்க வேண்டுமென ஊழியர் சங்கங்கள் கோருகின்றன. ஆனால், தமிழக அரசு ஏற்கனவே 24 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் நிலையில், இந்த நிலுவைத் தொகையையும் வழங்கினால் கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படும் அதனைத் தங்களால் வழங்க முடியாது என்கிறது தமிழக அரசு.

ஆசிரியர்களின் மற்றொரு முக்கியமான கோரிக்கை, மத்திய அரசில் உள்ள இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தைத் தங்களுக்கும் தர வேண்டுமென்பது. ஆனால், தமிழக அரசு இதற்கும் மறுப்புத் தெரிவித்துள்ளது. மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு; மேலும் இடை நிலை ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளத்தை உயர்த்தினால், அதே தரநிலையில் உள்ள பிற அரசுப் பணியாளர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டியிருக்கும்; அது இயலாத காரியம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசில் எங்களைப் போலவே படித்துவிட்டு, எங்களைப் போலவே பணிசெய்யும் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை நாங்கள் கேட்பது என்ன தவறு என்கிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள்.

தமிழக அரசின் மொத்த வரி வருவாய் 1,64, 950 கோடி ரூபாய் என்றும் இதில் 31.63 சதவீதம், அதாவது 52,171 கோடி ரூபாய் அரசு ஊழியர்களுக்கான சம்பளமாகவும் 15.37 சதவீதம் அதாவது 25, 362 கோடி ரூபாய் ஓய்வூதியமாகவும் வழங்கப்படுவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், நிர்வாகச் செலவு, வட்டி ஆகியவை போக 29 சதவீதமே எஞ்சியிருப்பதாகவும் அதனை வைத்தே மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது என்றும் அரசு தெரிவிக்கிறது. இந்தத் தொகை போதாமல் பொதுக் கடன் பெற்றுத்தான் அரசு செலவழித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 5,000 பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாகவும் 3,500 பள்ளிக்கூடங்கள் இணைக்கப்படுவதாகவும் பரப்பப்படும் தகவல்கள் தவறு என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை தங்களோடு பேசித் தீர்க்க வேண்டுமென ஜாக்டோ – ஜியோ வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை மீன்வளத் துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நடைபெற்ற போதிலும் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. “முதலமைச்சரிடம் சொல்கிறோம் என்று மட்டும் சொன்னார்கள். அதற்குப் பிறகு எதுவும் நடக்கவில்லையென்கிறார்” ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான கங்காதரன்.

இந்த கால வரையற்ற வேலை நிறுத்தம், தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் இருக்கிறது. ஆனால், தாங்கள் 2017 செப்டம்பரிலிருந்தே போராடிவருவதாகவும் இந்த முறை வேலை நிறுத்தத்திற்காக கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவுகளின் காரணமாகவே வேலை நிறுத்தம் தாமதமடைந்ததாகவும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் மாநிலம் முழுவதும் தற்காலிகமாக ஆசிரியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மாநில அரசு. எல்லா மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 500 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி அரசு தரப்பில் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பும் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டுமெனக் கூறியிருக்கிறது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம் மீண்டும் பிரச்சனை தான் வரும். தற்காலிக ஆசிரியர்களை நியமித்தால், இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும்போது அவர்கள் தங்களை நிரந்தரமாக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here