Home நாட்டு நடப்பு பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு – புயல் நிவாரண நிதி கோரினார்

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு – புயல் நிவாரண நிதி கோரினார்

55
0

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு – புயல் நிவாரண நிதி கோரினார்

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை அளித்து, மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அரசு சார்பிலும், தனியார் நிறுவனம், அரசியல் கட்சிகள், திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.  அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை எடுத்துக் கூறி, மத்திய அரசு நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் கஜா  புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக 15000 கோடி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இப்போது இடைக்கால நிவாரணமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டுக்கொண்டோம்.

மேலும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில்  நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். உடனடியாக மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.

கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் புயலால் சேதமடைந்த வீடுகள், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், படகுகள் என சேத விவரங்களையும் முதல்வர் விளக்கமாக கூறினார். நிவாரண உதவிகள் குறித்த புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here