Home நாட்டு நடப்பு சபரிமலையில் நாளை நடைதிறப்பு – பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு

சபரிமலையில் நாளை நடைதிறப்பு – பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு

47
0

சபரிமலையில் நாளை நடைதிறப்பு – பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு

சபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைகள், மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை போன்ற நாட்களில் நடை திறக்கப்படும். அய்யப்ப பக்தர்களும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால் சபரிமலை கோவிலுக்கு செல்ல 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. நீண்ட காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு ஐய்யப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இதனால் ஐய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி கேரளாவையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட போது அங்கு சென்ற இளம் பெண்களை ஐய்யப்ப பக்தர்கள் தடுத்ததால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தடியடியில் முடிந்தது.

சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கேமிரா காட்சிகள் மூலம் கண்காணித்து கைது செய்து வருகிறார்கள். நேற்று வரை 3,719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவில் நடை நாளை 5-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை ஆட்டத்திருநாள் பிறந்த நாளையொட்டி திறக்கப்படும் கோவில் நடை மறுநாள் தீபாவளியன்று இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

சபரிமலை கோவில் திறப்பையொட்டி அங்கு ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இளம் பெண்களும் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஐப்பசி மாத பூஜையின் போது, சபரிமலையில் நடந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது.

இதனால் நாளை நடை திறப்பின்போதும் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் சபரிமலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். சபரிமலை சிறப்பு பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கமாண்டோ போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய இந்த கமாண்டோ படையினர் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த கமாண்டோ படையில் 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.

1,500 போலீசாரும், 100 பெண் போலீசாரும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சன்னிதானம், நிலக்கல், பம்பை மற்றும் காட்டுப்பகுதிகளில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

போலீஸ் ஐ.ஜி. அஜித்குமார் சன்னிதானத்திலும், ஐ.ஜி. அசோக்யாதவ் பம்பையிலும், டி.ஐ.ஜி. பிலிப் நிலக்கலிலும் பாதுகாப்பு பணிகளுக்கு தலைமை ஏற்றுள்ளனர்.

நேற்று காலை முதலே சபரிமலையில் பாதுகாப்பு பணியை போலீசார் ஏற்றுக் கொண்டு விட்டனர். ஏ.டி. ஜி.பி. அணில்காந்த் சபரி மலையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஐய்யப்ப பக்தர்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டு செல்லக்கூடாது என்றும் அவ்வாறு சென்றால் அவர்களது முகத்திரையை விலக்கி போலீசார் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் மீது சந்தேகம் இருந்தால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். நாளை பகல் 2 மணிக்கு பிறகே நிலக்கலில் இருந்து சபரிமலைக்கு செல்ல ஐய்யப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களை தீவிர சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதிப்பார்கள்.

அவர்கள் 16 மணி நேரத்திற்கு மேல் சபரிமலை பகுதியில் தங்கக்கூடாது என்றும், போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல பக்தர்கள் மலை ஏறவும், மலையில் இருந்து இறங்கவும் வேறு வேறு பாதைகள் மூலம் செல்லவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் ஐய்யப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

பக்தர்கள் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதன் பிறகு கேரள அரசு பஸ்கள் மூலம்தான் அவர்கள் செல்ல முடியும். இதனால் நிலக்கலில் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

இதனால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here