Home அழகப்பா பல்கலைக்கழகம் UGC / NET தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

UGC / NET தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

47
0

UGC / NET தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் யுஜிசி / நெட் (UGC / NET) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.12.2018 முதல் 08.12.2018 வரை நடைபெறுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் இந்த பயிற்சி வகுப்பை (01.12.2018) தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், இந்த பயிற்சி வகுப்பில் உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் பணியாளர் தேர்வு வாரியம், இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை பணியாளர் தேர்வு வாரியம் (SSC / RRB / Forest Service) போன்ற பிற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரிகள், பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் தேர்வுகளை எழுதும்போது அனைவரும் பாடம் சார்ந்த அறிவைப் பெறவேண்டும், பட்டம் பெற வேண்டும் என்ற வகையில் அதன் அணுகுமுறை அமையும். ஆனால் போட்டித் தேர்வுகளை இளைஞர்களை எதிர் கொள்ளும்போது தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் வேலைக்கான காலியிடங்கள் குறைவாகவே இருக்கும். அந்த நிலையில் திறமை மிக்கவர்களில் அதிக திறமை உடையவர்களுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இதனை மனதில் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. இலக்கை அடையும் வரை மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றார்.

போட்டித் தேர்வுகளை எழுதும்போது விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுவது மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறன்கள் உள்ளது அதை உணர்ந்து செயல்பட்டால் எளிதில் இலக்கை அடையலாம். எந்த ஒரு பாடத்தையும் கற்கும்போது அப்பாடம் சார்ந்த தரமான ஆதார நூல்களை பயின்று குறிப்பெடுத்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அந்தப் பழக்கம் பின்னர் பணியாற்றும் அலுவலகங்களிலும் கோப்புகளை படித்து முடிவெடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் எவ்வாறு பயிற்சி மேற்கொண்டு கடின உழைப்புடன் தேர்விற்கு தயாராகின்றார்களோ, அதேபோல் கேள்வித் தாள்களை தயாரிக்கும் வல்லுனர்களும், குழுவாக, சிரத்தையுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய அணுகுமுறைகள், உத்திகளை கையாண்டு வினாக்களை உருவாக்குகின்றார்கள். அதனால் தான் போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் நுட்பமாகவும், திறமையை இனங்காணும் வகையிலும் அமைகின்றது.

சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகத்தில் வேலைநாடுநர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் அதிகமான அளவில் அமர்ந்து குறிப்பெடுத்து பயிலுவதை நாள்தோறும் காணமுடிகிறது. அத்தகைய சூழலை விரைவில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்திலும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான ஆதார நூல்கள், மாத இதழ்கள், வினா-வங்கி போன்றவைகள் வேலைநாடுநர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தன் அறிவில் தனியாக அமர்ந்து ஆழ்ந்து படித்து, புரிந்து குறிப்பெடுக்கும் பழக்கம் மற்றும் குழுக்களாக அமர்ந்து கலந்துரையாடல் மூலம் கற்றல் போன்ற ஆற்றல்களை வேலைநாடுநர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்கும்போதுதான் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியை அடைய முடியும் என்றார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here