Home அழகப்பா பல்கலைக்கழகம் தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த ஆராய்ச்சி எழுத்துமுறை – ஒருநாள் பயிற்சிப் பட்டறை

தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த ஆராய்ச்சி எழுத்துமுறை – ஒருநாள் பயிற்சிப் பட்டறை

2
0

தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த ஆராய்ச்சி எழுத்துமுறை – ஒருநாள் பயிற்சிப் பட்டறை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில்நுட்ப மற்றும் கல்விசார் எழுத்துப் பயிற்சி மையம் சார்பாக “தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த ஆராய்ச்சி எழுத்துமுறை” என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சிப் பட்டறை 14.02.2019-அன்று பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.  இப்பயிற்சிப் பட்டறையில் அழகப்பா பல்கலைக்கழக பல்வேறு துறைகளைச் சார்ந்த 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப மற்றும் கல்விசார் எழுத்துப் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. எஸ்.தனுஷ்கோடி வரவேற்புரையாற்றினார்.  அவர் தனது வரவேற்புரையில், தரமான ஆராய்ச்சி வெளியீடுகளின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது, ஆசிரியர்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளின் மூலம் எவ்வாறு அதிக குறியீட்டு விகிதத்தை அடைவது மற்றும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான எதிர்கால இலக்கை அடைவது, மேலும் ஆராய்ச்சி திட்டங்களை எவ்வாறு பெறுவது போன்றவைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதே இப்பட்டறையின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் இப்பயிற்சிப்பட்டறையை தொடங்கி வைத்து பேசியதாவது:

ஆசிரியர்கள் தங்களது பாடம் சார்ந்த அறிவை புதுப்பித்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  மேலும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் பாடங்கள் சம்பந்தப்பட்ட தற்போதைய போக்குகள் பற்றி தெரிந்து கொள்வதும், அது பற்றிய ஆழமான அறிவை பெற முயற்சிப்பதும் மிகவும் முக்கியமானது என்றார்.  அவ்வாறு ஆழமான அறிவை பெறாவிட்டால் போட்டிகள் மிகுந்த இவ்வுலகில் ஒரு நிலையான இடத்தை அடைய முடியாது என்றார்.  ஆராய்ச்சி என்பது ஓர் அர்ப்பணிப்பாகும்.  ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் எப்பொழுதுமே ஒரு நல்ல ஆசிரியராகவே திகழ்வார்.  ஆராய்ச்சியும், கற்பித்தலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்துவருகிறது. ஆராய்ச்சி வெளியீட்டில், வெறும் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அந்த ஆராய்ச்சிகள் மிகுந்த தரமுடையனவாக இருக்க வேண்டும் என்ற இலக்கினை கருத்தில் கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடங்களில் ஆழமான அறிவை பெறவேண்டும் என்ற தங்களது பொறுப்பை உணர வேண்டும்.  தரமான ஆராய்ச்சி கட்டுரைகள் ஆராய்ச்சியாளரின் மதிப்பை உயர்த்துவதோடு மட்டுமில்லாமல் அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கும் உதவும் என்றார்.  பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்களது சிறந்த ஆராய்ச்சிகளின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழக மேனாள் புல முதன்மையர் பேரா.கே.கதிரேசன் மற்றும் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை இணைப் பேராசிரியர் எம்.சாதிக் பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  அழகப்பா பல்கலைக்கழக உயிரிதகவல்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பேரா.எஸ்.கருத்த பாண்டியன்,  சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதும் முறைகள் குறித்தும், பேரா.கே.கதிரேசன், ஆராய்ச்சி கருத்துருகள் தயார் செய்வதில் உள்ள நுட்பங்கள் குறித்தும், முனைவர் எம்.சாதிக் பாட்சா, ஆராய்ச்சி வெளியீட்டு குறியீட்டு மதிப்பெண்கள் பெறுவது குறித்தும் உரை நிகழ்த்தினர்.

அழகப்பா பல்கலைக்கழக தொழில்நுட்ப மற்றும் கல்விசார் எழுத்துப் பயிற்சி மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.மதன் நன்றி கூறினார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here