Home அழகப்பா பல்கலைக்கழகம் ஒருநாள் மனித உரிமை பயிற்சி முகாம்

ஒருநாள் மனித உரிமை பயிற்சி முகாம்

46
0

ஒருநாள் மனித உரிமை பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூக பணித்துறை மற்றும் புதுடெல்லி தேசிய மனித உரிமை ஆணையம் இணைந்து நடத்திய ஒருநாள் மனித உரிமை பயிற்சி முகாம் இன்று (18.12.18) அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. இராஜேந்திரன் இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். மனித உரிமை என்பது ஒரு உலகளாவிய கருத்து என்றும் இந்திய கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை வரலாறு காட்டுகிறது. சகிப்புத் தன்மையும், இணக்கமாக இருத்தலும் மனித உரிமையின் அடிப்படை ஆகும். பேரரசர் அசோகர் தன் மக்களுக்கு, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத எந்த ஒரு சமயத்தையோ எந்த ஒரு சமயத்தின் கொள்கையையோ பின்பற்றலாம் என்ற உரிமையை கொடுத்திருந்தார். மனித உரிமையின் முக்கிய கருத்துகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை பிரெஞ்சு புரட்சி வலியுறுத்தியது. உரிமைகளும், கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என்றும் அதை அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டும் என்றும் கூறினார்.

முதல் உலகப்போருக்கு பின் ஜப்பானியர்கள் தங்களை இனவேற்றுமை இல்லாமல் ஐரோப்பியர்களுக்கு இணையாக நடத்த வேண்டும் என்று கூறியது நினைவுக்கூறத்தக்கது. பிரெஞ்சு புரட்சி முன்வைத்தது அரசியல் சுதந்திரம் மட்டுமே. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உலகெங்கும் பாலியல் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது வரவேற்கதக்கது என்றார். இந்த பயிற்சி மனித உரிமையை பேச்சில் மட்டும் இல்லாது வாழ்க்கை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை கற்றுகொடுக்கும் ஒரு கருவியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த பேராசிரியர் ராஜா முத்திருளாண்டி (திட்ட இயக்குநர் மனித உரிமை கல்வி இயக்ககம், திருச்சி) தனது உரையில் “மனித உரிமைகள்” என்ற வார்த்தைகள் இன்று உலகெங்கும் மந்திரமாக உச்சரிக்கப் படுகிறது என்றும் தமிழகத்தைப் பொறுத்த வரை திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன் இதைப்பற்றி குறிப்பிட்டு இருப்பது தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பை பறை சாற்றுகிறது என்றார். ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த மனித உரிமைகள் பற்றிய தீர்மானத்தை உருவாக்குவதில் இந்தியாவை சேர்ந்த மகாத்மா காந்தி, பேரா.ஹீமாயுன் கபீர், முனைவர் S.V பண்டேக்கார் ஆகிய மூவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. சொல்லில், செயலில், பண்பாட்டில் மனித உரிமை பண்புகளை நிலைநாட்டி ஒரு இணக்கமான சமூகத்தை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

பேராசிரியர் கு.பா. கணேசன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பேரா. முருகன் (சமூக பணித்துறை மற்றும முதன்மையர் கலைப்புலம்) தனது வரவேற்புரையில் இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கங்கள் குறித்து பேசினார். இந்நிகழ்வில் பேரா. கா. மணிமேகலை (மகளிரியல் துறைத் தலைவர் அழகப்பா பல்கலைக்கழகம்) அருட்பணியாளர் சிரில் (இயக்குநர், ஞானவில்) முனைவர் க.லதா (துணை பேராசிரியர், அரசு சட்டக் கல்லூரி, திருச்சி). முனைவர் ம.பிரபாவதி (துணை பேராசிரியர், மாற்று திறனாளிகள் மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி), ஆகியோர் பயிற்சி அளித்தார்கள். ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் த.ரா.குருமூர்த்தி, பேராசிரியர் பாண்டி (தலைவர், தமிழ்த்துறை) ஆகியோர் பங்குகொண்டனர். சமூகத் துறை ஆசிரியர் ஜெ. விக்னேஷ்சபரிகிரன் நன்றி கூறினார். 200-க்கும் மேற்பட்ட அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here